உள்ளூர் செய்திகள்
ஒற்றை யானையால் சேதப்படுத்தப்பட்ட வயல்வெளியை சோகத்துடன் பார்த்த விவசாயி.,

கரும்பு, நெல் வயலை சேதப்படுத்திய ஒற்றை யானை

Published On 2022-01-05 16:25 IST   |   Update On 2022-01-05 16:25:00 IST
அந்தியூர் அருகே ஒற்றை யானை கரும்பு, நெல் வயலை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
 அந்தியூர்:

அந்தியூர் அருகே ஒற்றை யானை கரும்பு, நெல் வயலை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர்  மலைப்பகுதியையொட்டி வட்டக்காடு, காக்காயனூர், வரட்டுப்பள்ளம் அணை, சோதனைசாவடி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் நெல், கரும்பு உள்ளிட்டவற்றை பயிர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாகிவிட்டது.

இந்நிலையில் அந்தியூர் அருகே உள்ள வட்டக்காடு பகுதியில் மயில்சாமி என்பவர் தனது தோட்டத்தில் நெற்பயிர்கள் பயிரிட்டுள்ளார். தற்போது பயிர்கள் நன்கு வளர்ந்து நெல் மணிகள் விட தயாராக இருந்தது. இதேபோல் கிழங்கு குளி என்ற பகுதியில் சூரி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். 

நேற்று இரவு இந்த பகுதிக்கு வந்த ஒற்றைகாட்டுயானை நெல்வயல், கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து சேதப்படுத்தியது.

நீண்ட நேரம் கரும்பு, நெற்பயிர்களை ருசித்த யானை மீண்டும் அதிகாலை வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

இன்று காலை விவசாயிகள் வழக்கம்போல் கரும்பு, நெல் வயலுக்கு சென்று பார்த்தனர். அப்போது யானை சேதப்படுத்தியதை கண்டு சோகம் அடைந்தனர். யானைகள் வயல்வெளியில் நுழைந்ததால் அதன் கால் தடங்கள் வயல்வெளிகளில் பதிந்து காணப்பட்டது. 

இந்நிலையில் இரவில் ஒற்றை யானை சுற்ற ஆரம்பித்துள்ளதால் தோட்டகாவலுக்காக யாரும் இரவில் தனியாக வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வனவிலங்குகள் அடிக்கடி சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Similar News