உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

இறந்த கோழிகளை வீசுவதால் மாசுபடும் பி.ஏ.பி.,வாய்க்கால்

Published On 2022-01-05 13:19 IST   |   Update On 2022-01-05 13:19:00 IST
மாசடைந்த தண்ணீரை குடிக்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள், மனிதர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
திருப்பூர்:

பி.ஏ.பி., முதல் மண்டல பாசனத்திற்கு திருமூர்த்தி அணையில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 26-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. பிரதான வாய்க்காலில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கிளை வாய்க்கால்கள் மூலம் பாசன நிலங்களுக்குச் செல்கிறது.

பொங்கலூர், பல்லடம், சுல்தான்பேட்டை வட்டாரங்களில் கோழிப் பண்ணைகள் அதிகளவில் உள்ளன. கோழிகள் வளர்க்கும்போது பண்ணைகளில் சில கோழிகள் இறப்பது வழக்கம். இறந்த கோழிகளை சில வியாபாரிகள் வாங்கி அருகிலுள்ள நகரங்களுக்கு கொண்டு சென்று விற்று வந்தனர்.

உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கையால் இறந்த கோழி விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் ஓரளவு குறைந்துள்ளது.

இதற்கிடையே இறந்த கோழிகளை பண்ணையாளர்கள் சிலர் பி.ஏ.பி., வாய்க்காலில் வீசுகின்றனர். அவை தண்ணீரில் அடித்துச் செல்லப்படுகிறது. மாசடைந்த தண்ணீரை குடிக்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள், மனிதர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:

விவசாயிகள் பலர் கூலிக்கு கோழி வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு குஞ்சு, தீவனம் போன்றவற்றை பெரும் பண்ணையாளர்களே வழங்குகின்றனர். பராமரிப்பு மட்டுமே விவசாயிகளை சேர்ந்தது. 

இறந்த கோழிகளை குழி தோண்டிப் புதைக்க செலவு ஆகும். செலவைத் தவிர்க்க வாய்க்காலில் வீசி எறிகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இதனை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Similar News