உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி விவசாயிகள் போராட்ட அறிவிப்பு

Published On 2022-01-04 09:52 GMT   |   Update On 2022-01-04 09:52 GMT
ஈரோடு கீழ்பவானி பாசன பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்கக்கோரி விவசாயிகள் நெல்லை கொட்டும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
ஈரோடு:

ஈரோடு கீழ்பவானி பாசன பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்கக்கோரி விவசாயிகள் நெல்லை கொட்டும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்ட பிரதான பாசன பகுதியான கீழ்பவானி கால்வாய் பாசனப்பகுதியில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களின் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 

தற்போது நெல் அறுவடைப்பணி தொடங்கி உள்ளது. அறுவடை செய்த நெல்லை வியாபாரிகள் கிலோ 14 முதல் 15 ரூபாய்க்குள் மட்டுமே விலை நிர்ணயித்து கொள்முதல் செய்கின்றனர்.

இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்கின்றனர். தற்போது அவ்வப்போது மழை பெய்வதாலும், கடும் பனியால் நெல்லை வைத்திருக்கவும் முடியவில்லை. 

ஆனால் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங்களில் கிலோவுக்கு 20.60 ரூபாய் என விலை நிர்ணயித்துள்ளதால் விவசாயிகள் நல்ல விலைக்கு விற்க வாய்ப்பாகும்.

நேற்று வரை அரசின் நெல் கொள்முதல் மையங்கள் கீழ்பவானி பாசனப்பகுதியில் திறக்கப்படாததால், விவசாயிகளிடம் நெல்லை அடிமாட்டு விலைக்கு வியாபாரிகள் வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 

கடந்தாண்டுகளில் டிசம்பர் மாதமே கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டது. இந்தாண்டு ஜனவரி முதல் வாரமாகியும் மையங்கள் திறப்பதற்கான நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை.

விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக நெல் கொள்முதல் மையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் வெள்ளிக்கிழமைக்குள் திறக்காவிட்டால் அறுவடை செய்த நெல் மூட்டைகளை ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கொட்டி அரசிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News