உள்ளூர் செய்திகள்
டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு
ஈரோட்டில் அதிக அளவில் பயணிகளை ஏற்றி வந்ததால் பாரம் தாங்காமல் சாய்ந்து வந்த பஸ் பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.
ஈரோடு:
ஈரோடு பஸ்நிலையத்தில் திங்கட்கிழமை என்பதால் இன்று காலை முதலே பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் என கூட்டம் அலைமோதியது.
பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட்டுசென்ற அனைத்து பஸ்களிலும் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது. ஒரு சில பஸ்களில் மாணவர்கள் படிகளில் தொங்கி கொண்டு சென்றனர்.
இன்று காலை 9.30 மணியளவில் ஈரோடு டவுண் பஸ்நிலையத்தில் இருந்து 11-ம் நெம்பர் டவுண் பஸ் சென்னிமலை நோக்கி புறப்பட்டது.
பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் ஏறினர். பஸ்சில் கட்டுக்கடங்காத வகையில் பயணிகள் கூட்டம் இருந்ததால் டிரைவர் மெதுவாக பஸ்சை ஓட்டி சென்றார்.
அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் பஸ் ஒருபக்கமாக சாய்ந்த படி சென்றது.பஸ் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே சென்று கொண்டு இருந்த போது திடீரென பஸ்சின் பின்பக்க ஆக்ஷில் கட்டானது.
இதையடுத்து பஸ் ஒரு புறமாக கவிழ்வது போல் சென்றது. இதையடுத்து டிரைவர் சாமர்த்தியதாக பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டனர்.
பின்னர் பயணிகள் அனைவரும் வேறு பஸ்களில் புறப்பட்டு சென்றனர். இதையடுத்து பஸ் டெப்போவுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக பன்னீர்செல்வம் பார்க் அருகே பரபரப்பாக காணப்பட்டது.