உள்ளூர் செய்திகள்
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு
நகரில் உள்ள பெரும்பாலான கடைகளில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது.
உடுமலை:
தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடையுள்ளது. அதன்படி பிளாஸ்டிக் கவர்கள், டம்ளர்கள், பிளாஸ்டிக் வாட்டர் பாக்கெட் உள்ளிட்ட பல பொருட்களை பயன்படுத்தக்கூடாது.
இதனை கண்காணித்து தடுக்கவும், அபராதம் விதிக்கவும் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை மற்றும் பல்வேறு இடங்களில் முழுமையாக பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.
பெரும்பாலான கடைகளில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் டம்ளர், பாலித்தீன் பைகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறியதாவது:-
நகரில் உள்ள பெரும்பாலான கடைகளில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது. அதிகாரிகள் பெயரளவில் மட்டும் ஆய்வு செய்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்கின்றனர்.
அதேபோல் பிளாஸ்டிக் கழிவுகள், நீர்நிலைகள் மற்றும் விளைநிலங்கள் ஒட்டிய பகுதிகளில் பரவிக் காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.