சுங்குவார்சத்திரம் அருகே ஒரே நாளில் 3 வீடுகளில் கொள்ளை
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சேந்தமங்கலம் கிராமம் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் சுந்தரராஜன். இவர் மூளையில் அறுவை சிகிச்சை செய்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவருடைய மருத்துவ செலவுக்காக வீட்டில் 3 லட்சம் பணம் வைத்து உள்ளனர். வீட்டில் உள்ள அனைவரும் சுந்தர்ராஜனை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள் சுந்தர்ராஜன் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3.25 சவரன் மற்றும் 3 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
அதேபோல் சுந்தர்ராஜன் வீட்டின் பின்புறம் குளக்கரை தெருவில் ராமன் என்பவர் வீட்டில் வெள்ளி கொலுசு மற்றும் அவர் வீட்டில் அருகிலுள்ள மணி என்பவர் வீட்டில் 4 ஆடுகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் செய்தனர்.
தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.