17 வயது சிறுமியை குளிக்கும்பொழுது புகைப்படம் எடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்த வரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் பெண்ண கோணம் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது24). இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அந்த சிறுமி படித்து முடித்ததும் திருமணம் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில் அந்த சிறுமியின் தாய் சிங்கப்பூர் நாட்டிற்கு வீட்டு வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் அந்த சிறுமி தன் தம்பியுடன் வீட்டில் தனியாக வசித்து வந்தார். அப்போது பால்ராஜ் அவருடைய வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றாராம். ஒருமுறை அந்த சிறுமி குளிக்கும்போது அவருக்கு தெரியாமல் படம் எடுத்து வைத்துக் கொண்டாராம்.
அதை காட்டி பலமுறை அவரை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இந்தநிலையில் அந்தப்படத்தை வெளியிடாமல் இருப்பதற்கு ரூ.10 லட்சம் தர வேண்டும் என்று கேட்டு மிரட்டி உள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி காரைக்குடியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் கடந்த அக்டோபர் மாதம் அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை அறிந்த பால்ராஜ் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமணி தலைமையில் போலீஸ் படை அமைக்கப்பட்டது.
இதற்கிடையில் தலைமறைவான பால்ராஜ் பெரம்பலூரில் ஒரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த வழக்கில் பிடிபட்டார். தகவல் அறிந்ததும் காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமணி தலைமையில் போலீசார் அவரை பெரம்பலூரில் இருந்து கைது செய்து அழைத்து வந்தனர்.
கைது செய்யப்பட்ட பால்ராஜை 10 நாள் காவலில் வைக்க போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாபுலால் உத்தரவிட்டார்.