உள்ளூர் செய்திகள்
புத்தாண்டையொட்டி கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
2022 புத்தாண்டு பிறந்ததையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இன்று காலை சிறப்பு தரிசனம் நடந்தது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி இன்று அதிகாலை கோவில்களில் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை அம்மனுக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் மாநகரில் இருந்து பக்தர்கள் பலர் வந்து அம்மனை வணங்கி சென்றனர்.
ஈரோடு சின்ன மாரியம்மன், கோட்டை ஈஸ்வரன், பெருமாள், மாநகராட்சி வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில், கருங்கல்பாளையம் ஓங்காளியம்மன், பார்க்ரோடு எல்லைமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன், வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் இன்று அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
கோபி மூலவாய்க்கால் கரிவரதராஜ பெருமாள், வேலுமணி நகர் சக்தி விநாயகர், அய்யப்பன், பச்சமலை, பவளமலை முருகன் கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன், கோபி சாரதா மாரியம்மன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் இன்று சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது.
பவானி கூடுதுறை வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் ஆதிகேசவ பெருமாள் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், பழனியாண்டர், தேவபுரம் மாரியம்மன், அம்மாபேட்டை காவிரிக்கரை சொக்கநாதர் கோவிலில் அதிகாலை சிறப்பு அங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அந்தியூர் பத்ரகாளி யம்மன், சென்னிமலை முருகன், திண்டல் வேலாயுதசாமி கோவில்களில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து சாமிதரிசனம் செய்தனர். பக்தர்கள் முககவசம் அணிந்து கைகள் கழுவிய பின்பே அனுமதிக்கப்பட் டனர்.
உலகம் முழுவதும் இன்று புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவு 11.30 முதல் 1.30 வரை பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
நள்ளிரவில் மாவட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் ஆலயத்தின் பங்கு தந்தை ஜான்சேவியர் குழந்தை தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
முதலில் நன்றி வழிபாடும் அதை தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது. உதவி பங்குத்தந்தை ராயப்பதாஸ், அருள்தந்தை மைக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஈரோடு ரெயில்வே காலனி திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் பங்குத்தந்தை ஆரோக்கிய யூதா ததேயு தலைமையில் நள்ளிரவு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
சி.எஸ்.ஐ. பிரப் தேவாலயத்திலும் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த வழிபாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு, பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், நம்பியூர், கவுந்தப்பாடி, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களிலும் புத்தாண்டையொட்டி இன்று சிறப்பு பிராத்தனை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து இன்று காலை நடைபெற்ற சிறப்பு திருப்பலியிலும் கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.