உள்ளூர் செய்திகள்
ஆவின் பால்

ஆவின் பால் அட்டையில் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு

Published On 2022-01-01 05:06 GMT   |   Update On 2022-01-01 07:05 GMT
ஆவின் பால் அட்டையை பெற ஏதேனும் ஒரு அடையாள அட்டையை விண்ணப்பத்துடன் சேர்த்து சமர்ப்பிக்கும் பட்சத்தில் உடனடியாக பால் அட்டை வழங்கப்படும்.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி கடந்த 16.5.2021 முதல் ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து ஆவின் பால் சராசரியாக நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் விற்பனை அதிகரித்துள்ளது.

ஆவினின் அடையாளமாக பொதுமக்களுக்கு அதிகபட்ச விலையில் இருந்து மேலும் குறைத்து சலுகை விலையில் பால் அட்டை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விவரம் வருமாறு:-

சமன்படுத்தப்பட்ட பால் (நீலம்) ரூ.40-லிருந்து ரூ.37 ஆக குறைகிறது. மாதாந்திர சேமிப்பாக ஒரு லிட்டருக்கு ரூ.90-ம், ½ லிட்டருக்கு ரூ.45-ம் கிடைக்கிறது.

நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை) ரூ.44-லிருந்து ரூ.42 ஆக குறைக்கப்படுகிறது. மாதாந்திர சேமிப்பாக ஒரு லிட்டருக்கு ரூ. 60-ம் ½ லிட்டருக்கு ரூ.30-ம் மிச்சமாகிறது.

நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு) ரூ.48-லிருந்து ரூ.46-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மாதாந்திர சேமிப்பாக ஒரு லிட்டருக்கு ரூ.60-ம், ½ லிட்டருக்கு ரூ.30-ம் கிடைக்கும்.

தற்போது வரை சென்னையில் சுமார் 6 லட்சம் குடும்பங்கள் பிரதி மாதம் பால் அட்டையை சலுகை விலையில் (மாதம் லிட்டருக்கு ஒன்று ரூ.60 முதல் ரூ.90) சேமிப்பு) பெற்று பயன் அடைந்து வருகின்றனர்.

மேலும் அனைத்து பொதுமக்களும் இத்தகைய சலுகையை பெற இன்று முதல் ஜனவரி மாதம் முழுவதும் ஆவின் வட்டார அலுவலகங்கள், பால் நுகர்வோர்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ஆவின் அதிநவீன பாலகங்கள் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

ஆவின் பால் அட்டையை பெற ஏதேனும் ஒரு அடையாள அட்டையை விண்ணப்பத்துடன் சேர்த்து சமர்ப்பிக்கும் பட்சத்தில் உடனடியாக பால் அட்டை வழங்கப்படும். பாலகங்களில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு மட்டும் மறுநாள் ஆவின் வட்டார அலுவலர்கள் மூலம் பால் அட்டை வழங்கப்படும்.

மேலும் இணைய தளம் வாயிலாகவும் புதிய பால் அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம். இணைய முகவரி-
www.aavin.tn.gov.in & www.aavinmilk.com


இந்த சலுகை பால் அட்டை பொதுமக்களுக்கு மட்டுமே வழங்கப்படும். எந்தவொரு தனியார் நிறுவனங்களுக்கும் வழங்கப்படாது.

எனவே அனைத்து பொதுமக்களும் ஆவின் பால் அட்டையை சலுகை விலையில் பெற்று கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் பொருளாதாரத்தை உயர்த்திடும் பணியிலும் நுகர்வோர்கள் ஆவின் நிறுவனத்துடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் நுகர்வோர்கள் பால் அட்டை சலுகை குறித்த தங்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை 18004253300 எனும் கட்டணமில்லா தொலைபேசி மூலமாகவும் தெரிவிக்கலாம்.

நுகர்வோர்கள் பண்டிகை நாட்களில் பால் மற்றும் பால் உபபொருட்களின் முன்பதிவு குறித்த தகவல்களை தொலைபேசி எண்- 044-23464578-579-580 மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் ஆவின் குறித்த தகவல்களை அன்றாடம் முகநூல் (Facebook-aavintn), டுவிட்டர் (Twitter-@AavinTN) போன்ற சமூக வலைதளங்கள் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

Similar News