உள்ளூர் செய்திகள்
கோட்டையூரில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
கோட்டையூரில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரமக்குடி, சாலைக்கிராமம் செல்லும் பஸ்கள், கதிர் அறுக்கும் எந்திரம், லாரிகள் செல்ல முடியாமல் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.
இளையான்குடி:
இளையான்குடி அருகே உள்ள கோட்டையூர் கிராமத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 5 தள்ளுவண்டிகளில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரமக்குடி, சாலைக்கிராமம் செல்லும் பஸ்கள், கதிர் அறுக்கும் எந்திரம், லாரிகள் செல்ல முடியாமல் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.
அரசு மற்றும் தனியார் பஸ் ஓட்டுனர்கள் தங்களது மேலாளர்களுக்கு தகவல் கூறி இளையான்குடி காவல் துறைக்கு புகார் செய்தனர். தகவல் அறிந்த இளையான்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பெண்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி விவரங்கள் கேட்டு சமாதானப்படுத்தி எச்சரித்து அனுப்பி வைத்தார்.
காவிரி கூட்டுக் குடிநீர் 2 நாட்களுக்கு ஒருமுறை வருவதால் தண்ணீர் பிடிப்பதில் இரு பகுதிகளை சேர்ந்த பெண்கள் இடையே தகராறு ஏற்பட்டு யார் முதலில் தண்ணீர் பிடிப்பது என சண்டையிட்டு, ஒரு பகுதியை சேர்ந்த பெண்களை தண்ணீர் பிடிக்க விடாமல் தடுத்ததாக கூறி பெண்கள் மறியலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதில் மறியல் செய்தால் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தண்டிக்கப்படுவீர்கள் என இன்ஸ்பெக்டர் எச்சரித்து அனுப்பினார். காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட அதிகாரிகளிடம் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.