உள்ளூர் செய்திகள்
வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 31-ந்தேதி நடக்கிறது

Published On 2021-12-29 16:03 IST   |   Update On 2021-12-29 16:03:00 IST
வேலைவாய்ப்பு முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. இதில் பங்கேற்பவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி கலந்து கொள்ள வேண்டும்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வேலைவாய்ப்பு வெள்ளி என்ற தலைப்பின் கீழ் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வந்தது.

கடந்த சில மாதங்களாக கொரோனா நோய் தொற்றின் காரணமாக இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பெருந்தொற்று தாக்கம் குறைந்து வருவதால் தமிழக அரசு வேலை வாய்ப்பு முகாம்கள் நேரடியாக நடத்துவதற்கு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து வருகிற 31-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி அளவில் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். வேலைநாடுநர்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினைப் பெறலாம்.

மேலும், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்து பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து வருபவர்களுக்கு உதவித் தொகைக்கான விண்ணப்பமும் வழங்கப்படுகிறது.

எனவே விருப்பம் உள்ள 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்த இளைஞர்கள் கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. இதில் பங்கேற்பவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News