உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ரூ.15 லட்சம் கேட்டு ஜவுளிக்கடை அதிபர் கடத்தல்

Published On 2021-12-29 13:32 IST   |   Update On 2021-12-29 13:32:00 IST
ஈரோட்டில் நடைபயிற்சி சென்ற ஜவுளிக்கடை அதிபர் ரூ.15 லட்சம் கேட்டு கடத்தப்பட்டார் கடத்தல் கும்பலிடம் பணத்தை கொடுத்ததும் விடுவிக்கப்பட்டார்
ஈரோடு: 

ஈரோடு கருங்கல் பாளையம், குயிலாந் தோப்பு, மரப்பாலம் 3-வது வீதியை சேர்ந்தவர் சிவா என்கிற சிவசுப்பிரமணியம் (57). இவர் ஈரோட்டில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் கடந்த 25-ந் தேதி காலையில் சிவசுப்பிர மணியம் ஈரோடு வ.உ.சி மைதானத்திற்கு நடைப்பயிற்சி மேற்கொள்ள சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் சிவசுப்பிரமணியத்தை வழிமறித்து வலுக்கட்டாயமாக அவரை காரில் கடத்தி சென்றுள்ளனர்.

காரிலேயே பல்வேறு இடங்களுக்கு சுற்றிய அக்கும்பல் ரூ.15 லட்சம் பணம் கேட்டு சிவசுப்ரமணியத்தை மிரட்டி உள்ளனர்.  
பணத்தை கொடுக்காவிட்டால் கொன்று ஆற்றில் வீசிவிடுவோம் என்று மிரட்டியதையடுத்து சிவசுப்பிரமணியம் தனது நண்பர் கண்ணன் என்பவரை தொடர்பு கொண்டு தான் கடத்தப்பட்ட விபரத்தை கூறியதோடு, ரூ.15 லட்சத்தை தயார் செய்து அந்தியூர் அரசு மருத்துவமனை அருகே கொண்டு வரும்படி கேட்டுள்ளார்.

இதையடுத்து கண்ணன் பணத்தை தயார் செய்து கொண்டு அந்தியூர் அரசு மருத்துவமனை அருகில் சென்று  அந்த கும்பலிடம் பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட கடத்தல் கும்பல் பெருந்துறை பஸ் நிலையம் அருகில் சிவசுப்பிரமணியத்தை விடுவித்துவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர்.

பின்னர் வீட்டிற்கு வந்த சிவசுப்பிரமணியம் பயம் காரணமாக கடத்தல் குறித்து போலீசில் புகார் செய்யாமல் இருந்து வந்தார். இந்நிலையில் அந்த கடத்தல் கும்பல் மீண்டும் நேற்று சிவசுப்பிரமணயத்தை தொடர்பு கொண்டு மேலும் பணம் கேட்டதாக கூறப்படுகின்றது. 

இதையடுத்து சிவசுப்பிரமணியம் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று தான் கடத்தப்பட்ட விவரங்கள் குறித்து புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடத்தினர். 

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், தர்மராஜ், ராஜன், பிரபு மற்றும் 3 பேர் என தெரியவந்தது. 

மேலும் கடத்தல் கும்பலைச் சேர்ந்த  7 பேர்  தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News