உள்ளூர் செய்திகள்
பாபநாசம் அருகே தொழிலாளி மீது கொலைவெறி தாக்குதல்: மனைவி-மகன் கைது
பாபநாசம் அருகே தொழிலாளி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபநாசம்:
கும்பகோணம் தாலுகா மருதாநல்லூர் நந்தவனம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50).இவர் டைல்ஸ் வேலை பார்த்து வருகிறார். பாபநாசம் அருகே உத்தாணி மயான சாலையில் மர்ம நபர்களால் நாகராஜ் பயங்கரமாக தாக்கப்பட்டு தலையில் கல்லைப் போட்டு தாக்கியும், கால்களில் பாட்டில்களால் கீரியும் படுகாயத்துடன் கிடந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு பாபநாசம் துணை சூப்பிரண்டு பூரணி, இன்ஸ்பெக்டர் அழகம்மாள் ஆகியோர் சென்று நாகராஜை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து நாகராஜ் மகன் சிவபாரதி (வயது 25) கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. போலீஸ் விசாரணையில் நாகராஜ் தொடர்ந்து குடித்து விட்டு தனது மனைவி ரேவதியை (46) அடித்துக் கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரேவதி அரிவாளை எடுத்து நாகராஜை வெட்டியுள்ளார். பின்னர் மகன் சிவபாரதி தனது தந்தை நாகராஜை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று பாபநாசம் அருகே ஒரு கிராமத்தில் மயான சாலை பகுதியில் இறக்கி விட்டு அங்கே தலையில் கல்லை போட்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியது விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ரேவதி, சிவபாரதி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இச்சம்பவம் பாபநாசம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.