உள்ளூர் செய்திகள்
கொரோனா தடுப்பூசி

தமிழகம் முழுவதும் இன்று 16-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது

Published On 2021-12-25 22:28 GMT   |   Update On 2021-12-25 22:28 GMT
தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
சென்னை:

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன்மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
 
மேலும், 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
தற்போது வரை 15 மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தில் நடந்துள்ளது. வீடுகளுக்கு சென்றும் தடுப்பூசி போடப்படுகிறது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் 16-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது. 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 1600 இடங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது. எனவே தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறுகையில், இந்த வார தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. அடுத்த வாரம் சனிக்கிழமை புத்தாண்டு என்பதால் அடுத்த வாரமும் ஞாயிற்றுக்கிழமையே தடுப்பூசி முகாம் நடைபெறும். அதன்பிறகு வழக்கம் போல் சனிக்கிழமைகளில் முகாம் நடைபெறும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News