உள்ளூர் செய்திகள்
கதையை கேட்டு ரசித்த மாணவர்கள்.

ராகல்பாவி அரசு பள்ளியில் கதை சொல்லும் நிகழ்ச்சி - மாணவர்கள் ஆர்வமுடன் கேட்டு ரசித்தனர்

Published On 2021-12-25 09:29 GMT   |   Update On 2021-12-25 09:29 GMT
பள்ளி மாணவர்கள் பேரிடர் காலகட்டத்துக்குப் பிறகு பள்ளிக்கு வந்துள்ளதால் அவர்களை தயார் படுத்துவதற்காக புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
உடுமலை:

ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கதை சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமை வகித்தார். 

பள்ளி மாணவர்கள் பேரிடர் காலகட்டத்துக்குப் பிறகு பள்ளிக்கு வந்துள்ளதால் அவர்களை தயார் படுத்துவதற்காக புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களிடம் கதையை கூறுவதன் மூலமாக அவர்களின் படைப்பாற்றல் திறனை வளர்க்க முடியும். 

குறிப்பாக கதை கூறுதல் என்பது அந்த கதையில் வரும் கதை மாந்தரை போலவே நடித்து முகபாவனை மூலமாக குரல் ஏற்றத்தாழ்வை பயன்படுத்தி கூறும்போது மாணவர்களின் கவனத்தை நம்மீது திருப்ப முடியும் என்பதை அடிப்படையாகக் கொண்டு அறிவியல் புனை கதைகள், அன்றாட வாழ்க்கையில் நாம் கடைபிடிக்க வேண்டிய சிறந்த செயல்பாடுகளுக்கான கதைகள், மாணவர்களுக்கே பிடித்தமான தந்திரக் கதைகள், நன்னெறிக் கதைகள் ஆகியவற்றை மிக அழகாக கதைசொல்லி பூங்கொடி எடுத்துக்கூறினார். 

இது போன்ற நிகழ்வுகளை உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு நடத்த தயாராக இருப்பதாக அவர் கூறினார். முகமூடி அணிந்தும், குரல் ஏற்றத்தாழ்வுகளுடனும் கதை கூறியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர் . 

மேலும் பள்ளி நூலகத்திற்கு மாணவர்கள் ஆர்வத்தோடு படிக்கும் 50க்கும் மேற்பட்ட சிறார் கதைப் புத்தகங்களையும் வழங்கினார். கதைசொல்லி பூங்கொடிக்கு ராகல்பாவி ஊராட்சி மன்ற தலைவி சுமதி செழியன் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசினை வழங்கினார். முடிவில் ஆசிரியர் கண்ணபிரான் நன்றி கூறினார்.
Tags:    

Similar News