உள்ளூர் செய்திகள்
டிரான்ஸ்பாரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் பள்ளி முன்பு டிரான்ஸ்பாரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் ஆர்ப்பாட்டம்

Published On 2021-12-24 12:42 IST   |   Update On 2021-12-24 12:42:00 IST
பள்ளி அருகே டிரான்ஸ்பாரம் அமைந்தால் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சற்று தொலைவிலோ அல்லது வேறு இடத்திலோ டிரான்ஸ்பாரம் வைக்க வேண்டும் என்றனர்.

ஈரோடு:

ஈரோடு காளைமாடு சிலை அருகே மாநகராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது இங்கு எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளியின் நுழைவு வாயில் அருகே டிரான்ஸ்பாரம் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கு டிரான்ஸ்பாரம் அமைந்தால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து பெற்றோர்கள் சார்பில் மின் வாரியத்திடமும், மாநகராட்சியிடமும் மனு அளிக்கப்பட்டது. எனினும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று வழக்கம் போல் டிரான்ஸ்பாரம் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த 20-க்கும் மேற்பட்ட பெற்றோர் பள்ளி அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி அருகே டிரான்ஸ்பாரம் அமைந்தால் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சற்று தொலைவிலோ அல்லது வேறு இடத்திலோ டிரான்ஸ்பாரம் வைக்க வேண்டும் என்றனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உங்கள் கோரிக்கை குறித்து உயரதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். இங்கு ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். அதனை ஏற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Similar News