உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

ஊட்டச்சத்துமிக்க சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்- உணவு பாதுகாப்பு ஆலோசகர் அறிவுறுத்தல்

Published On 2021-12-23 07:50 GMT   |   Update On 2021-12-23 07:50 GMT
தினமும் உணவில் அரிசி, கோதுமை வகைகளையே அதிகம் சேர்த்துக்கொள்கிறோம்.
அவிநாசி:

அவிநாசி வட்டாரம் சின்னேரிபாளையம் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தானியப்பயிர் சாகுபடி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அவிநாசி வட்டார வேளாண்மை அலுவலர் சுஜி வரவேற்றார்.

நிகழ்ச்சியில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் திட்ட ஆலோசகர் அரசப்பன் பேசியதாவது:-

தினமும் உணவில் அரிசி, கோதுமை வகைகளையே அதிகம் சேர்த்துக் கொள்கிறோம். இதிலிருந்து கார்போஹைட்ரேட் சத்து மட்டுமே அதிகம் கிடைக்கிறது. ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்து, வைட்டமின் மற்றும் தாது உப்பு ஆகியவை அவசியம். சிறுதானியங்களான சோளம், கம்பு, ராகி, சாமை, தினை, வரகு மற்றும் குதிரைவாலி ஆகியவற்றின் மூலம் இவை கிடைக்கும். 

ஊட்டச்சத்துமிக்க சிறுதானியங்களை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், ஊட்டச்சத்துமிக்க சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய வேளாண் தொழில்நுட்பம் குறித்த செய்முறை பயிற்சியும் வழங்கப்பட்டது. 

கோடை உழவு செய்தல், பண்ணைக்குட்டை அமைத்தல், ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்து இடுதல், செறிவூட்டிய உயிர் உரம் தயாரித்து பயிர்களுக்கு இடுதல், உயர்விளைச்சல் தரக்கூடிய விதை ரகங்கள் உபயோகித்தல்.விதைகளை விதை நேர்த்தி செய்து விதைத்தல், விதை கடினப்படுத்துதல், நுண்ணூட்டச்சத்து இடுதல், ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு முறைகளை கடைபிடித்தல் போன்ற தொழில்நுட்பங்களை கையாள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

அட்மா’ திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரகாஷ், உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை அவிநாசி வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News