உள்ளூர் செய்திகள்
குடோனில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த துணி நூல் எரிந்து கிடந்ததை காணலாம்

ஈரோட்டில் குடோனில் பயங்கர தீ விபத்து- நூல் பண்டல்கள் எரிந்து நாசம்

Published On 2021-12-21 10:16 GMT   |   Update On 2021-12-21 10:16 GMT
ஈரோட்டில் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நூல் பண்டல்கள் எரிந்து நாசமானது.
ஈரோடு:

ஈரோடு கிராமடை சாந்தான்கருக்கு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் சொந்தமாக நூல் குடோன் வைத்துள்ளார். குடோனின் மேல் பகுதியில் கண்ணன் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தரைதளத்தில் குடோன் செயல்பட்டு வருகிறது.

துண்டு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் நூற்றுக்கணக்கான நூல் பண்டல்கள் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் கண்ணனின் நூல் குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது.

சிறிது நேரத்தில் குடோனில் தீ கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

எனினும் இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நூற்றுக்கணக்கான நூல் பண்டல்கள் எரிந்து நாசமானது. தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் கண்ணன் வீட்டில் தீ பரவவில்லை.

இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News