உள்ளூர் செய்திகள்
கீழடியில் வயல்களில் தேங்கிய தண்ணீரை கடத்த பள்ளம் தோண்டும்போது தென்பட்ட உறைகிணறு

வயலில் தேங்கிய தண்ணீரை கடத்தியபோது கீழடியில் தென்பட்ட உறைகிணறு

Published On 2021-12-20 15:38 IST   |   Update On 2021-12-20 15:38:00 IST
கீழடியில் வயலில் தேங்கிய தண்ணீரை கடத்தியபோது கீழடியில் உறைகிணறு தென்பட்டது.
திருப்புவனம்:

திருப்புவனம் யூனியனை சேர்ந்தது கீழடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் 3 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றன. பின்னர் மாநில அரசின் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.

இதில் 4,5-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கீழடியில் நடைபெற்றது. 6, 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கீழடி மற்றும் அதை சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. இதுவரை நடைபெற்றுள்ள 7 கட்ட அகழ்வாராய்ச்சியில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இந்த பொருட்கள் மூலம் பண்டைய தமிழர்களின் வாழ்க்கை முறை பற்றி தெரியவந்துள்ளது.

தற்போது கீழடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள வயல்களில் விவசாயம் செய்யப்பட்டு இருந்தது. கடந்த மாதம் பெய்த தொடர் மழையாலும், கால்வாயில் தண்ணீர் வந்ததாலும் வயல் பகுதியில் தண்ணீர் அதிகம் தேங்கி உள்ளது. இதனால் பயிர்கள் அறுவடை தாமதமாகி உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் தண்ணீரை கடத்த வயலின் அருகில் பள்ளம் தோண்ட முயற்சி செய்துள்ளனர். பள்ளம் தோண்டும்போது ஆற்றுமணல் தென்பட்டு உள்ளது. மேலும் ஆழமாக பள்ளம் தோண்டும்போது உறைகிணறு தெரியவந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் தொல்லியல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் உத்தரவின்பேரில் தொல்லியல் அலுவலர் பாஸ்கரன் மற்றும் அலுவலர்கள் சென்று உறைகிணறு உள்ள பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விவசாய பயிர்கள் அறுவடை முடித்த பின்பு உறைகிணறு பற்றிய அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.

Similar News