உள்ளூர் செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

கிறிஸ்தவர்களுக்கு அ.தி.மு.க. என்றென்றும் உறுதுணையாக இருக்கும்- எடப்பாடி பழனிசாமி

Published On 2021-12-20 09:09 GMT   |   Update On 2021-12-20 09:09 GMT
கிறிஸ்தவர்களுக்கு அ.தி.மு.க. என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்று இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை:

சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள ஏழைகளின் சிறிய சகோதரிகளின் முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.

விழாவில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-

கிறிஸ்துவம் என்றால் அன்பு. அந்த அன்பை போதிக்க ஏசுபிரான் உலகில் பிறந்தார். அந்த அன்பை உலகிற்கு எடுத்துச்செல்லும் உன்னதப் பணியில் கிறிஸ்துவர்களாகிய நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள்.

ஆகவே ஒவ்வொரு ஆண்டும் தேவன் ஏசுகிருஸ்து பிறந்த டிசம்பர் 25-ம் நாளை அன்பு பிறந்த தினமாக, கிருஸ்துமஸ் தினமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

ஜாதி, மதம் பார்க்காமல், முதியவர்கள், நோய்வாய்பட்டவர்கள் என்றில்லாமல், அனைவருக்கும் பேரன்பை வாரி வழங்கி, அவர்களுக்கு உதவி செய்யும் உன்னத பணியில் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள். கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர்கள் ஏழை, எளியவர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் கிருஸ்துமஸ் அன்பளிப்பை வழங்கி மகிழ்வார்கள்.

கிறிஸ்துமஸ் வருகிறது என்றாலே, அனைத்து மக்களிடமும் உற்சாகம் பெருகும். தங்களது வீட்டில் வண்ண காகிதத்தால் ஆன விண்மீன்களை செய்து வண்ண விளக்குகளால் அலங்கரிப்பார்கள். கிருஸ்துமஸ் மரம் அமைப்பார்கள். நண்பர்களை அழைத்து விருந்து கொடுத்து மகிழ்வார்கள்.

டிசம்பர் 24-ந்தேதி நள்ளிரவு உலகம் முழுவதும் உள்ள மக்கள் அமைதியுடனும், சகோதரத்துடனும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். கிருஸ்துவர்களின் அன்பை உலகிற்கு எடுத்துச்சொல்லும் சுவிசே‌ஷத்திற்கு நான் என்றென்றும் துணையாக இருப்பேன். தமிழகத்தில், ஏன் இந்தியாவிலேயே கல்வியையும், நவீன மருத்துவத்தையும் அறிமுகப்படுத்திய கிருஸ்துவர்களாகிய உங்களுக்கு அ.தி.மு.க. என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்று கூறி இந்த நல்ல வாய்ப்பை வழங்கிய உங்களுக்கு என்னுடைய உளமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News