உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில அகராதி தயாரிக்கும் பணிகள் தீவிரம்

Published On 2021-12-19 06:20 GMT   |   Update On 2021-12-19 06:20 GMT
ஆங்கில விரிவுரையாளர் சுகுணா தலைமைவகித்து அகராதி தயாரிப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார்.
உடுமலை:

கொரோனா பரவல் ஓரளவு குறைந்துள்ளதால் தற்போது அரசு பள்ளிகளில் மீண்டும் வகுப்புகள் வழக்கமாக நடந்து வருகிறது. 

இதையொட்டி கல்வித்துறையும் கற்றல், கற்பித்தல் மேம்பாட்டுக்கான திட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்த தொடங்கி உள்ளது. 

இதையொட்டி உடுமலை திருமூர்த்தி நகரில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் வகையில் ஆங்கில அகராதி தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இதற்கான திட்டமிடல் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர்  முன்னிலையில் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் உடுமலை பார்க் ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆங்கில அகராதி தயாரிப்பு பணி தொடங்கியது.

ஆங்கில விரிவுரையாளர் சுகுணா தலைமைவகித்து அகராதி தயாரிப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார். அவ்வகையில் 3 முதல், 12-ம் வகுப்பு வரை ஆங்கிலப்பாடத்தில் உள்ள கடினமான வார்த்தைகளை மாணவர்களுக்கு எளிதாக்கும் வகையில் அகராதி தயாரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. 

இதற்கான பணியில் உடுமலை ஒன்றியத்தைச்சேர்ந்த ஆசிரியர்கள் வசந்தி, கவிதா, இந்துமதி, பாரதிபாபு, லீலாகண்ணன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

பயிற்சி நிறுவனத்தார் கூறுகையில், 

இம்மாத இறுதி வரை, இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் வாயிலாக மாணவர்களின் ஆங்கில அறிவு மேம்படுவதுடன் கற்றல் எளிமையாகும் என்றனர்.
Tags:    

Similar News