வெளிநாட்டில் இருந்து ஈரோட்டுக்கு வந்த 2 பேருக்கு கொரோனா
ஈரோடு:
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில் அவ்வப்போது உருமாற்றம் அடைந்து பீதியை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு ஒமைக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த வகை தொற்று சாதாரண தொற்றை விட வேகமாக பரவக்கூடியது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தற்போது இந்த வகை தொற்று உலகில் 90 நாடுகளுக்கு மேல் பரவி உள்ளது. இந்தியாவிலும் காலெடுத்து வைத்து பல்வேறு மாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது.
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பானது 100 பேரை தாண்டிவிட்டது. இதனால் மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறை பல்வேறு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்திலும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதையடுத்து முககவசம் அணிதல், தனிநபர் இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.
தடுப்பூசிகள் போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தியும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் வருகின்றனர். இதனிடையே பல்வேறு வெளிநாடுகளில் இருந்து இதுவரை 183 பேர் ஈரோடு வந்துள்ளனர். கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில் 65 பேருக்கு ஒரு வார காலம் முடிவடைந்ததால் அவர்களுக்கு 2-வது கட்டமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. பரிசோதனை செய்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திகொள்ள வேண்டும் என்றும் எக்காரணம் கொண்டும் 2-வது கட்ட பரிசோதனைக்கு முன்னர் வெளியே நடமாடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில் முதல் கட்டமாக 65 பேருக்கு ஒருவாரம் முடிவடைந்ததால் அவர்களுக்கு மீண்டும் 2-வது கட்ட கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 2 ஆண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 2 எபர்களில் ஒருவர் சிங்கப்பூரில் இருந்தும், மற்றொருவர் ஸ்பெயின் நாட்டில் இருந்தும் வந்தவர்கள் ஆவர்.
இதையடுத்து அவர்கள் 2 பேரும் உடனடியாக சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இருவருக்கும் ஒகைக்ரான் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறிவதற்காக அவர்களது சளி ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கு முதல் கட்ட பரிசோதனை முடிந்து, அறிகுறிகள் இருப்பது தெரியவந்ததால், அடுத்த கட்ட பரிசோதனைக்காக பெங்களூருவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு ஒமைக்ரான் தொற்று உள்ளதா? என்பது குறித்து தெரியவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.