உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

கோபிசெட்டிபாளையம் அருகே டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேருக்கு அரிவாள்வெட்டு

Published On 2021-12-17 09:35 IST   |   Update On 2021-12-17 09:35:00 IST
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே டாஸ்மாக் ஊழியர்கள் பேரை அரிவாளால் வெட்டிய 4 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோபி:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது இடையன் காட்டு வலசு. இந்த பகுதியில் ஒரு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு விற்பனையாளர்களாக மணிகண்டன் காளீஸ்வரன் (44), சிவக்குமார் (38) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

சம்பவத்தன்று இரவு விற்பனை முடிந்ததும் இவர்கள் 2 பேரும் கடையில் வசூலான பணத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.

அவர்கள் 2 பேரும் கண்ணாங்காட்டு பாளையம் பிரிவு என்ற பகுதியில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது 4 வாலிபர்கள் திடீரென அவர்களை வழிமறித்தனர். மேலும் டாஸ்மாக் கடையில் வசூலான பணத்தை கேட்டு மிரட்டினர்.

ஆனால் மணிகண்டன் காளீஸ்வரன், சிவக்குமார் ஆகியோர் பணத்தை தர மறுத்தனர். இதையடுத்து 4 பேர் கும்பல் திடீரென அரிவாளால் 2 பேரையும் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதையடுத்து டாஸ்மாக் ஊழியர்கள் கடத்தூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது டாஸ்மாக் ஊழியர்களை பணம் கேட்டு மிரட்டி அரிவாளால் வெட்டியது கூடக்கரை என்ற பகுதியை சேர்ந்த பழனிசாமி (21), அன்பழகன் (21) என்பது தெரியவந்தது. மேலும் அந்த கும்பலை சேர்ந்த 2 பேர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News