உள்ளூர் செய்திகள்
உடுமலை ஒன்பதாறு சோதனைச்சாவடியில் லாரியின் டயர்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட காட்சி.

பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை- கேரளாவில் இருந்து உடுமலை வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிப்பு

Published On 2021-12-16 07:56 GMT   |   Update On 2021-12-16 07:56 GMT
கேரளாவில் இருந்து வரும் பறவையினங்கள் மற்றும் தீவனங்களை கண்டறிந்து திருப்பி அனுப்பப்படுகிறது.
உடுமலை:

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வாத்துகள் இறந்தன. இதையடுத்து தமிழக-கேரள எல்லையில் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் பறவைக்காய்ச்சல் தடுப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள ஒன்பதாறு சோதனை சாவடியில் 3 குழுவினர் சுழற்சி முறையில் 24 மணி நேரம் பணிய மர்த்தப்பட்டுள்ளனர். இக்குழுவில் கால்நடை டாக்டர், கால்நடை ஆய்வாளர் மற்றும் உதவியாளர் இடம் பெற்றுள்ளனர்.

கேரளாவில் இருந்து உடுமலை ஒன்பதாறு சோதனைசாவடி  வழியாக வரும் வாகனங்களில்  நோய் தடுப்பு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுவது மட்டுமின்றி, கேரளாவில் இருந்து வரும் பறவை யினங்கள் மற்றும் தீவனங் களை கண்டறிந்து  திருப்பி அனுப்பப்படுகிறது.

பறவையினங்களுக்கு பரவும் நோய் தாக்குதல் இல்லை என்ற கேரளா அரசின் சான்று பெற்றிருந்தாலும்  உயர் அதிகாரி களின் முறையான உத்தரவு இன்றி வாகனங்கள் அனுமதி க்கப்படவில்லை.

இதுகுறித்து கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர் ஜெயராம் கூறுகையில், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பறவையினங்களை எடுத்துச்செல்லும் வாகனங்கள் மீண்டும் திரும்பும்போது கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

கறிக்கோழி பண்ணை களில் ஆய்வு செய்யப்பட்டு வருவதுடன் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
Tags:    

Similar News