உள்ளூர் செய்திகள்
ஆடை உற்பத்தியாளர் - வர்த்தகர்களை இணைக்க புதிய இயங்குதளம் தொடக்கம்
வர்த்தகர்களுக்கு அவர்களின் வினியோக சங்கிலியில் உள்ள அதிக தெரிவு நிலையை அளிக்கிறது.
திருப்பூர்:
கொரோனா காரணமாக ஆடை உற்பத்தியாளர்கள் ஆர்டர்கள் பெற வெளிநாடுகளுக்கு செல்லாமல் ஆன்லைன் மூலம் ஆர்டர்கள் பெறுவது மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் ஆடை உற்பத்தியாளர் மற்றும் வர்த்தகர்களை (பையர்) இணைக்கும் புதிய இயங்குதளம் தொடங்கபட்டுள்ளது. இதனை பயன்படுத்தி ஏற்றுமதி வர்த்தகத்தை மேம்படுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் சோஷியல் அக்கவுன்டபிலிட்டி இன்டர்நேஷனல் சார்பில் ஏ.இ.பி.சி. உடன் இணைந்து ‘பேர் கெபாசிட்டி’ என்ற இயங்கு தளம் தொடங்கப்பட்டது. இத்தளம் வர்த்தகர்கள், ஆடை உற்பத்தியாளர் இடையிலான உறவை வலுப்படுத்தவும், இந்திய ஆடைகளில் நுகர்வோர் நம்பிக்கையை மேம்படுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் கூறியதாவது:
இந்த இயங்கு தளம் சர்வதேச தரத்தில் ஆடைகள் வழங்க நம் உறுதிப்பாட்டை மேலும் அதிகரிக்கும். வினியோக சங்கிலியில் வேலை நிலைமையை மேம்படுத்தும். வர்த்தகர்களுக்கு அவர்களின் வினியோக சங்கிலியில் உள்ள அதிக தெரிவு நிலையை அளிக்கிறது.
நிறுவனங்கள் முன்கூட்டியே உருவாக்கும் புதுமையான ஆடை வடிவமைப்புகளை ஊக்குவிக்கும். இந்த தளத்தின் உதவியுடன் தொழிற்சாலைகளில் ஏற்படும் நெருக்கடி நிலைகளை நிர்வகிக்கவும், நடைமுறையில் உள்ள நல்ல வழிமுறைகளையும் தெரிவிக்கிறது.
இயங்குதளத்தில் உற்பத்தி திறன் கால்குலேட்டர் மற்றும் திறன் அளவீடு மற்றும் முன்கணிப்பு நடைமுறைகளை மேம்படுத்த வழிமுறைகளும் அடங்கியுள்ளது. ஆடை உற்பத்தியாளர்கள் பல்வேறு வணிக அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர்.
சில நேரங்களில் கடைசி நிமிட ஆர்டர்களை பெறுவதால் அதிகளவிலான ஓவர் டைம் மற்றும் அங்கீகரிக்கப்படாத துணை ஒப்பந்தம் ஆகியவற்றின் அபாயத்தில் உள்ளனர். இத்தளம் இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும்.
வர்த்தகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இத்தளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளலாம். இந்தியாவில் ஆடை உற்பத்தியாளர்கள் எந்த கட்டணமும் இன்றி இத்தளத்தை அணுகலாம். டிஜிட்டல் கருவிகள் மற்றும் இலவச பயிற்சிக்கான முன்னுரிமையையும் பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.