அத்திவரதர் குளம் முழுவதும் நிரம்பியது
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது.
இங்குள்ள அனந்த சரஸ் குளத்தில் வீற்றிருக்கும் அத்திவரதர் சிலை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே கொண்டு வரப்பட்டு தரிசன விழா விமரிசையாக நடைபெறும்.
கடந்த 2019-ம் ஆண்டு அனந்த சரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பின்னர் 48 நாட்களுக்கு பிறகு அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராவி மண்டபத்தில் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் பகுதியில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பின்னர் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள நீராவி மண்டபம் முழுவதுமாக நிரம்பி உள்ளது.
இந்த குளத்தில் 24 படிக்கட்டுகள் உள்ளன. தற்போது 21 படிக்கட்டுகள் முழுமையாக நீர் நிரம்பி இருக்கிறது. கடந்த ஒரு மாதமாக விட்டுவிட்டு பெய்த தொடர்மழை காரணமாக அத்திவரதர் கோவில் குளம் நீராவி மண்டபம் என அனைத்தும் நிரம்பி 3 படிக்கட்டுகள் மட்டுமே வெளியே தெரிகிறது.
இதுவரை எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு அத்திவரதர் குளம் தண்ணீரால் நிரம்பி இருப்பதால் பக்தர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வரதராஜ பெருமாள் கோவிலில் கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை ஒட்டி ஸ்ரீ தாத தேசிக சாற்று முறை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
உற்சவத்தையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு ஆண்டுக்கு ஒருமுறை அணிவிக்கப்பட்டு ஸ்ரீ தேவி, பூதேவி உடன் சிறப்பு அலங்காரம் அத்திகிரி மலையில் இருந்து இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பின்னர் ரத்ன அங்கி அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி மற்றும் பெருந்தேவித் தாயார் உடன் எழுந்தருளிய வரதராஜப் பெருமாள் மேள தாளங்கள் முழங்க கோவில் வளாக பிரகாரத்தில் உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.
இதையும் படியுங்கள்... எல்லைகளை பாதுகாக்க உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பம்: அமித் ஷா