உள்ளூர் செய்திகள்
எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் வேட்பு மனுதாக்கல்

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓபிஎஸ்-இபிஎஸ் வேட்பு மனுதாக்கல்

Published On 2021-12-04 07:30 GMT   |   Update On 2021-12-04 09:58 GMT
அ.தி.மு.க கிளைக் கழகங்களுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான மனுதாக்கல் விரைவில் தொடங்குகிறது.
சென்னை:

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் கடந்த 1-ந்தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது.

அப்போது அ.தி.மு.க. சட்டவிதிகளில் முக்கிய திருத்தங்கள் செய்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரையும் அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர்கள் ஒரே வாக்கில் இணைந்து தேர்வு செய்வார்கள் என்று விதியில் திருத்தம் செய்யப்பட்டது.

மறுநாள் (2-ந்தேதி) அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 7-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான மனுதாக்கல் 3-ந்தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.



முதல் நாளான நேற்று ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. மனுதாக்கல் செய்ய இன்று மாலை வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இன்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் வேறு யாரும் அந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கவில்லை.

இந்த நிலையில் இன்று காலை அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் தலைமைக்கழகத்துக்கு வந்தனர். மாவட்ட செயலாளர்களும் வந்தனர். இவர்களை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வந்தனர். இருவரும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்புமனுதாக்கல் செய்தனர். அவர்களது மனுவை தேர்தல் பொறுப்பாளர்களான பொன்னையனும், பொள்ளாச்சி ஜெயராமனும் பெற்றுக் கொண்டனர்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வாகும் வகையில் மாவட்ட கழக அமைப்புகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஓ.பன்னீர்செல்வத்தையும், எடப்பாடி பழனிசாமியையும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் வழிமொழிந்தனர். அவர்களும் வேட்புமனுவில் கையெழுத்திட்டு கொடுத்தனர்.

வேட்புமனுக்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பரிசீலனை செய்யப்படுகின்றன. கட்சி விதிகளின்படி மனுதாக்கல் செய்யப்படுவதால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

அதற்கு அடுத்த நாள் 6-ந் தேதி மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். 7-ந் தேதி ஓட்டுப்பதிவு என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் போட்டியில்லாததால் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை.

8-ந் தேதி (புதன்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில்லாததால் அந்த நடைமுறையும் வராது. எனவே அதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் போட்டியின்றி தேர்வு செய்வதாக அறிவிக்கப்படுவார்கள்.

இதன் மூலம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவியை ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி பழனிசாமியும் தக்க வைத்துக்கொள்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. கிளைக் கழகங்களுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான மனுதாக்கல் விரைவில் தொடங்குகிறது. அப்போது அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் பரபரப்பான சூழ்நிலையை எட்டும்.


Tags:    

Similar News