உள்ளூர் செய்திகள்
பலி

பர்கூர் மலைப்பகுதியில் யானை தாக்கி விவசாயி பலி

Published On 2021-12-01 04:00 GMT   |   Update On 2021-12-01 04:00 GMT
பர்கூர் மலைப்பகுதியில் யானை தாக்கி பலியான விவசாயி உடலை மீட்ட போலீசார் மற்றும் வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி துருசனாபாளையம் தேக்கமரத்துகாடு என்ற பகுதியை சேர்ந்தவர் தொட்டமாதையன் (58) விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் கேழ்வரகு, மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார்.

விவசாய பயிர்களை இரவு நேரத்தில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நாசம் செய்து வந்தது. இதையடுத்து தொட்டமாதையன் தனது தோட்டத்துக்கு இரவு காவலுக்கு சென்று வந்தார்.

இதேபோல் நேற்று இரவும் வீட்டில் சாப்பிட்டு விட்டு அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு காவலுக்கு சென்றார். அப்போது அவர் தோட்டத்தில் உள்ள ஒரு குடிசை வீட்டில் இரவு தூங்கினார்.

நள்ளிரவு 1 மணி அளவில் திடீரென நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. இதையடுத்து வீட்டிற்குள் படுத்திருந்த தொட்டமாதையன் வெளியே வந்து பார்த்தார்.

அப்போது இரவு நேரம் என்பதால் அவருக்கு பின்னால் இருந்த ஒரு யானையை அவர் கவனிக்கவில்லை. இதையடுத்து யானை தொட்டமாதையனை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

இரவு நேரம் என்பதால் இதுகுறித்து யாருக்கும் தெரியவில்லை. இன்று காலை தொட்டமாதையன் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் தோட்டத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு அவர் யானை மிதித்து இறந்து கிடந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் பர்கூர் போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தொட்டமாதையன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News