செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் திருக்குமரன் நகரில் வாய்க்கால் ஆக்கிரமிப்பால் வீடுகளுக்குள் புகும் மழைநீர்

Published On 2021-11-28 12:33 IST   |   Update On 2021-11-28 12:33:00 IST
வள்ளலார் நகரில் இருந்து சீனிவாசா நகருக்கு 600 அடி தூரத்திற்கு தார்ச்சாலை அமைத்துக்கொடுத்தால் மக்கள் சிரமம் இல்லாமல் செல்ல வழி கிடைக்கும்.
திருப்பூர்:

திருக்குமரன் நகரில் வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின்(மார்க்சிஸ்ட்)  திருப்பூர் தெற்கு ஒன்றியம், திருக்குமரன் நகர் பகுதி கிளை சார்பில் அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

திருக்குமரன் நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடியின் பின்புறம் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதால் குழந்தைகள் உள்ளே அமர முடியாத அளவுக்கு கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. ஆகவே அங்கன்வாடிக்கு சுற்றுச்சுவர் எழுப்பி மதுபோதை ஆசாமிகள் பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்க வேண்டும்.

திருக்குமரன் நகர் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 800 மாணவர்கள் படித்து வரும் நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்கள் தரையில் அமர்ந்து படிக்கிறார்கள். அவர்களுக்கு சிரமம் இல்லாமல் அமர்ந்து பயில மரத்திலான இருக்கை செய்து தர ஆவண செய்ய வேண்டும்.

பழவஞ்சிபாளையத்திலிருந்து வெள்ளியங்காடு பகுதிக்கு செல்வதற்கு சீனிவாசா நகர் பகுதியின் வழியாக செல்ல வேண்டும். வள்ளலார் நகரில் இருந்து சீனிவாசா நகருக்கு 600 அடி தூரத்திற்கு தார்ச்சாலை அமைத்துக்கொடுத்தால் மக்கள் சிரமம் இல்லாமல் செல்ல வழி கிடைக்கும்.

சிவசக்தி நகர், அமராவதி நகர், திருக்குமரன் நகர், வள்ளலார் நகர் பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் வள்ளலார் பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. அதனால் அப்பகுதி யில் பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடும், கொசுத் தொல்லையும் அதிகரிக்கிறது. இதை கவனத்தில் கொண்டு குப்பை கொட்ட மாற்று இடம் மற்றும் குப்பையை தரம் பிரித்து மாற்று எரிசக்தியாக  பயன்படுத்த வேண்டும்.

சிவசக்திநகர், அமராவதி நகர், திருக்குமரன் நகர், வள்ளலார் நகர் பகுதியில் இருந்து வாய்க்கால் செல்கிறது. தற்போது வாய்க்கால் இருந்த இடம் தெரியாமல் மறையும் நிலையில் உள்ளது.

இதனால் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழி இல்லாமல் வீடுகளுக்குள் புகும் நிலை உள்ளது. பாம்பு போன்ற உயிரினங்களும் சேர்ந்து வரும் நிலை உள்ளது. எனவே வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News