செய்திகள்
சென்னை பெருநகர பகுதி விரிவாக்கம் - செங்கல்பட்டு மாவட்ட மக்களிடம் கருத்து கேட்பு
சென்னை பெருநகர பகுதி விரிவாக்கம் தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி கூட்ட அரங்கத்தில் சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினரும், செயலாளருமான அன்ஷீல் மிஷ்ரா தலைமையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சென்னை பெருநகரப்பகுதி விரிவாக்கம் தொடர்பான பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய அன்ஷீல் மிஷ்ரா தெரிவித்ததாவது:-
வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை பல முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னைப் பெருநகர எல்லை விரிவாக்கம் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய, சென்னை பெருநகரப் பகுதி 1975-ஆம் ஆண்டு 1,189 ச.கி.மீ பரப்பளவில் வரையறுக்கப்பட்டது. இதில் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி, 2 நகராட்சிகள், 6 பேரூராட்சிகள் 10 ஊராட்சி ஒன்றியங்களை கொண்டுள்ளது.
இந்திய அளவில் டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களுரூ ஆகிய பெருநகரப் பகுதிகள் முறையே 3,180 சதுர கி.மீ 6,355 சதுர கி.மீ 7,100 சதுர கி.மீ மற்றும் 8,022 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. ஆனால் சென்னைப் பெருநகர பகுதியானது இதுவரை விரிவடையாமல் தொடக்க காலத்தில் இருந்து 1,189 சதுர கி.மீ அளவிலேயே இன்றும் நீடித்து வருகி்றது.
சென்னை பெருநகரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 20 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சிகளை கவனிக்கும் போது சென்னை பெருநகரபகுதிக்குள் ஏற்பட்டுள்ள அதே வளர்ச்சி விரிவாக்க பகுதியிலும் காணப்படுகிறது. ஆனால் சென்னையில் உள்ள அளவு பெரிய கட்டமைப்பு வசதிகள் இந்த பகுதியில் இல்லை இந்த பகுதியின் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான திட்டம் எதுவும் தயாரிக்கப்படவில்லை.
சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம், தற்போதைய பெருநகரப் பகுதிக்குள் பல பெரிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்கியுள்ளது. அதில் சாலை வசதிகளில் உள் வட்டச்சாலை, வெளி வட்டச்சாலை, நெடுஞ்சாலை, ரெயில் பகுதிகளில் துரித ரெயில் போக்குவரத்து திட்டம், மெட்ரோ ரெயில் திட்டம், பெரிய பஸ் நிலையங்களில் கோயம்பேடு, கிளாம்பாக்கம், குத்தம்பாக்கம், புது நகர உருவாக்கத்தில் மறைமலை நகர் மற்றும் மணலி, அங்காடிகளில் கோயம்பேடு பூ, காய்கறி, கனி அங்காடி, சாத்தாங்காடு இரும்பு அங்காடி போன்ற பெரிய திட்டங்களை செயல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. விரிவாக்க பகுதியில் வளர்ச்சி திட்டத்தின் வேகத்தை கருத்தில் கொண்டு, இந்த பகுதியில் சரியான திட்டத்தை செயல்படுத்தவும், பொதுமக்களுக்கான வசதிகளை பெருக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த பகுதிக்கான கட்டமைப்புகளை உருவாக்க தனி கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் சென்னை பெருநகர எல்லைபகுதியை விரிவாக்கம் செய்யலாம் என முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான கருத்துகளை பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், விவசாயிகள், வணிக மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆகியோரிடமிருந்து கருத்துகளை கேட்டு எல்லையை விரிவாக்கலாம் என்று கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் சென்னை போன்ற இடங்களில் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி கருத்துகளை பெற்றது போல் புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா போன்றவற்றில் பொது மக்களின் கருத்துகளை பெற வேண்டும என்ற நோக்கதோடு முதல்கட்டமாக செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பொதுமக்களின் கருத்துகளை பெற வேண்டும் என்ற நோக்கதோடு சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழுமம், மக்களின் கருத்துகளை பெற உத்தேசித்து இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு விரிவாக்கம் தொடர்பான தங்களின் கருத்துகளை ஆய்வு செய்து எல்லையை நிர்ணயிக்க அரசு முடிவெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ. பாலாஜி, சென்னை பெருநகர வளர்ச்சி குழும முதன்மை செயல் அதிகாரி எம்.லட்சுமி, மாவட்ட கலெக்டர் ஆ.ர்.ராகுல் நாத், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தலைமை திட்ட அமைப்பாளர், முழுமைத் திட்டப்பிரிவு சி.எஸ்.முருகன், சென்னை பெருநகர வளர்ச்சி குழும மூத்த திட்ட அமைப்பாளர், முழுமை திட்டபிரிவு காஞ்சனமாலா, மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆதார்ஸ் பச்சோரா, திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் இதயவர்மன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.