செய்திகள்
தக்காளி

கோவையில் தக்காளி விலை குறைந்தது- கிலோ ரூ.50க்கு விற்பனை

Published On 2021-11-27 10:46 GMT   |   Update On 2021-11-27 10:46 GMT
ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் தக்காளி சீசன் தொடங்கியுள்ளதால் வருகிற நாட்களில் தக்காளி விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கோவை:

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகவும், வரத்து குறைவு காரணமாகவும் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

குறிப்பாக கோவையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தக்காளி ரூ.100-ஐ தாண்டி விற்பனையானது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து பசுமை பண்ணை கடைகளில் கிலோ ரூ.75-க்கு தக்காளி விற்பனை செய்ய அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கோவை மார்க்கெட்டுகளுக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து தற்போது அதிகரித்துள்ளது. இதனால் தக்காளியின் விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.100 முதல் ரூ.120-க்கு விற்பனையான தக்காளி நேற்று கிலோ ரூ.60க்கு விற்பனையானது. இன்று காலை கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் நாட்டு தக்காளி ரூ.50க்கும், ஆப்பிள் தக்காளி ரூ.50க்கும் விற்பனையாகி வருகிறது. 2 நாட்களாக விலை உயர்ந்து காணப்பட்ட தக்காளியின் விலை இன்று குறைந்ததால் மக்களும் நிம்மதி அடைந்தனர். அவர்கள் மார்க்கெட்டுகளில் வழக்கம் போல் தக்காளி மற்ற காய்கறிகளை வாங்கி சென்றனர்.

இதேபோல் கோவை உழவர்சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.58க்கு விற்பனையாகி வருகிறது. ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் தக்காளி சீசன் தொடங்கியுள்ளதால் வருகிற நாட்களில் தக்காளி விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
Tags:    

Similar News