செய்திகள்
சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதை படத்தில் காணலாம்.

சென்னை மாநகரம் முழுவதும் 500 தெருக்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன

Published On 2021-11-27 05:22 GMT   |   Update On 2021-11-27 06:21 GMT
கடந்த முறை மழை வெள்ளம் தேங்கிய இடங்களிலேயே மீண்டும் மழை நீர் தேங்கி உள்ளது. இதையடுத்து மீண்டும் மழை வெள்ளம் தேங்காத அளவுக்கு சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னை:

சென்னையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக அனைத்து இடங்களிலும் மழை நீர் தேங்கி உள்ளது.

சென்னையில் தி.நகர், கே.கே.நகர், மாம்பலம், மேற்கு மாம்பலம், கோயம்பேடு, வடபழனி, விருகம்பாக்கம், சாலிகிராமம், நுங்கம்பாக்கம், சூளைமேடு, புரசைவாக்கம், புளியந்தோப்பு, எழும்பூர், வேளச்சேரி, மேடவாக்கம், அண்ணாநகர், முகப்பேர், வேப்பேரி பூந்தமல்லி நெடுஞ்சாலை கமி‌ஷனர் அலுவலகம் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் முக்கிய சாலைகளிலும், தெருக்களிலும் தண்ணீர் முழங்கால் அளவுக்கு மேல் தேங்கி உள்ளது.

கடந்த ஒரு வாரமாக மழை நீர் வடிந்த இடங்களில் எல்லாம் தற்போது மீண்டும் வெள்ளம் தேங்கி நிற்கிறது.



சென்னை மாநகரில் 1 லட்சத்துக்கும் அதிகமான தெருக்கள் உள்ளன. இதில் தாழ்வான இடங்களில் உள்ள 500 தெருக்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த இடங்களில் தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்களும், அதிகாரிகளும், போலீசாரும் ஈடுபட்டு உள்ளனர்.

கடந்த முறை மழை வெள்ளம் தேங்கிய இடங்களிலேயே மீண்டும் மழை நீர் தேங்கி உள்ளது.

இதையடுத்து மீண்டும் மழை வெள்ளம் தேங்காத அளவுக்கு சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதற்கான ஆய்வு பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வடிகால்களை முறையாக பராமரிக்கவும் அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி அறிவுரை வழங்கி உள்ளார்.

பொதுமக்களுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பலர் தங்களது வீடுகளில் தேங்கும் குப்பைகளை கால்வாயில் கொட்டுவதும், மழை வெள்ளம் தேங்கி இருக்கும் நிலையிலும் குப்பைகளை வெள்ளத்திலேயே வீசுவதும் பல இடங்களில் தற்போதும் தொடருகிறது.

இது தொடர்பாக அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறார்கள். குப்பைகள் கால்வாய்களில் தேங்குவதாலேயே தண்ணீர் வடியாமல் உள்ளது எனவும் கால்வாய்களை பராமரிக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் பொதுமக்களிடம் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News