செய்திகள்
வேதா நிலையம்

வேதா இல்லம் வழக்கு - சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு

Published On 2021-11-23 22:25 GMT   |   Update On 2021-11-23 22:25 GMT
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடைமையாக்கி பிறப்பித்த சட்டத்திற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
சென்னை:

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

அதேபோல, வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதி சேஷசாயி விசாரித்தார். 

அப்போது, தீபா மற்றும் தீபக் தரப்பில், தனிநபர் சொத்துக்களைக் கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரமில்லை. வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும். நினைவில்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

மேலும், வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தங்களிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டதை, வீட்டிற்கு 67 கோடியே 90 லட்ச ரூபாய் அளவிற்கு இழப்பீடு நிர்ணயித்து, அந்த தொகையை சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் நிலம் கையகப்படுத்துதல் அதிகாரி செலுத்தியது தவறு என வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சேஷசாயி வழக்குகளின் மீதான தீர்ப்புகளை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில் வேதா இல்லம் தொடர்பான வழக்குகளில் இன்று பிற்பகல் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News