செய்திகள்
ஜிகே வாசன்

தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு வேலை வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Published On 2021-11-20 12:23 IST   |   Update On 2021-11-20 15:53:00 IST
2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 60 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த 8 ஆண்டுகளாக அரசுப் பணி கிடைக்காமல் மிகவும் சிரமத்தில் இருக்கிறார்கள்.

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றலில் திறமை மிக்க ஆசிரியர்களின் பணி அடிப்படையானது. அந்த வகையில் ஆசிரியர் பணிக்கு தகுதியுடையவர்கள் அரசுப்பள்ளிகளில் பணியாற்றுகிறார்கள்.

கடந்த 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசுப்பணி கிடைக்கும் என்று காத்திருக்கிறார்கள். அதாவது 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 60 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த 8 ஆண்டுகளாக அரசுப் பணி கிடைக்காமல் மிகவும் சிரமத்தில் இருக்கிறார்கள்.

குறிப்பாக ஆசிரியர்கள் அரசுப்பணி வேண்டி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டதால் அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பணிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 8 ஆண்டுகளாக பணிக்காக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் மீண்டும் ஒரு நியமனத் தேர்வு என்ற அரசாணை ரத்து செய்யப்பட வேண்டும்.

2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பில் முன்னுரிமை அளித்து வேலைவாய்ப்பில் பதிவு மூப்பு அதாவது தேர்ச்சி மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர் பார்க்கிறார்கள்.

எனவே தமிழக அரசு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்...விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் டிஜிபிக்கள் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ள கூடாது - பிரியங்கா காந்தி

Tags:    

Similar News