செய்திகள்
மாணவி தற்கொலை தொடர்பாக மேலும் 2 பேரிடம் விசாரணை

கோவையில் மாணவி தற்கொலை தொடர்பாக மேலும் 2 பேரிடம் விசாரணை

Published On 2021-11-17 11:43 GMT   |   Update On 2021-11-17 11:43 GMT
தற்கொலை செய்து கொண்ட மாணவி எழுதிய கடிதத்தில் இருந்த மற்ற 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை:

கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக கோவை மேற்கு மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாணவியின் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மாணவிக்கு வேறு யாராவது பாலியல் தொல்லை கொடுத்தார்களா? தற்கொலைக்கு முன்பு மாணவி யார், யாரிடம் பேசினார் என பல்வேறு கோணங்களில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை செய்த மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் உள்ள கையெழுத்தும், பழைய பள்ளியில் மாற்று சான்றிதழ் கேட்டு மாணவி கொடுத்த விண்ணப்பத்தில் உள்ள கையெழுத்தும் சரியாக பொருந்தவில்லை. இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மாணவியின் நோட்டு புத்தகங்களையும் ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.

இதையடுத்து கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீசார் நேற்று மாணவி வீடு, கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனின் அறை, மாணவியின் ஆண் நண்பர் வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மாணவியின் வீட்டில் இருந்து நோட்டு புத்தகங்கள், மடிக்கணினி ஆகியவற்றை எடுத்து சென்றனர். அதில் உள்ள கையெழுத்தையும், மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் உள்ள கையெழுத்ததும் ஒன்று தானா? என்பதை கண்டறிய ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் மாணவியின் நண்பர் மற்றும் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி வீட்டில் இருந்து தலா ஒரு செல்போன் என 2 செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தற்கொலை செய்து கொண்ட மாணவி எழுதிய கடிதத்தில் இருந்த மற்ற 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே மாணவி தற்கொலை செய்து கொண்டதும், சமூக வலைதளமான யூடியூப் சேனல்களில் மாணவியின் புகைப்படம், முகவரி, பெயர் போன்ற விவரங்களுடன் பலரும் செய்திகளை பரவவிட்டனர். பாலியல் தொல்லையில் மாணவி இறந்ததால் அவரது பெயர், புகைப்படங்களை வெளியிட்டதாக கூறி 48 யூடியூப் சேனல்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

விரைவில் அந்த 48 சேனல்கள் மீதும் வழக்குப்பதியப்பட்டு, அதனை முடக்குவதற்கான நடவடிக்கைகளையும் போலீசார் எடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News