செய்திகள்
காட்டு யானை

கூடலூர் அருகே கும்கிகள் மூலம் காட்டு யானைகளை விரட்டும் பணி தொடங்கியது

Published On 2021-11-15 10:58 GMT   |   Update On 2021-11-15 10:58 GMT
கும்கி யானைகள் மூலம் பாடந்தொரை பகுதியில் உள்ள கல்லீங்கரை, செளுக்காடி உள்ளிட்ட குடியிருப்பையொட்டி வனப்பகுதிகளிலும், அடர்ந்த வனப்பகுதிகளிலும் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதா? என வனத்துறையினர் கண்காணித்தனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா பாடந்தொரை பகுதியில் 2 காட்டு யானைகள் தினமும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, பாக்கு உள்ளிட்ட பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. இதுதவிர பெண் ஒருவரையும் யானை தாக்கியதில் அவர் காயம் அடைந்தார்.

ஊருக்குள் யானைகள் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். யானையை விரட்ட நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் உறுதியளித்தனர்.

இதையடுத்து வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டுவதற்காக முதுமலையில் இருந்து கும்கி யானைகளான விஜய், சுஜய் வரவழைக்கப்பட்டன.

உடனடியாக கும்கி யானைகள் மூலம் பாடந்தொரை பகுதியில் உள்ள கல்லீங்கரை, செளுக்காடி உள்ளிட்ட குடியிருப்பை யொட்டி வனப்பகுதிகளிலும், அடர்ந்த வனப்பகுதிகளிலும் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதா? என கண்காணித்தனர்.

மேலும் கிராம எல்லைகளில் யானைகளை நிறுத்தி வைத்து காட்டு யானைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் வனப்பகுதிக்குள் விரட்டும் பணி நடந்து வருகிறது. மேலும் இப்பகுதியில் வசிக்க கூடிய மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்றும், தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News