செய்திகள்
கோப்புபடம்.

மழையால் வீடுகள் சேதம் தங்குவதற்கு இடமின்றி தவிக்கும் மலைவாழ் மக்கள்

Published On 2021-11-13 07:09 GMT   |   Update On 2021-11-13 07:09 GMT
கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
உடுமலை:
 
உடுமலையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள திருமூர்த்திமலையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள மக்கள் தங்களுக்கு பாதுகாப்பான வீடுகளும், வீட்டுமனைப்பட்டாவும் வழங்க வேண்டும் என அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுவரை வழங்கப்படாததால் பெரும்பாலான மக்கள் கூரை அல்லது தகரத்தால் மேற்கூரைகள் வேய்ந்து, மண் சுவர்களால் ஆன வீடுகளில் வசித்து வருகின்றனர். 

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. மண் அரிப்பால்  சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டு சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. எஞ்சியிருக்கும் சுவர்களும் எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. 

எனவே அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பான வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலம் முடியும் வரை பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதுகுறித்து மலைவாழ் பெண்கள் சிலர் கூறியதாவது:- 

கனமழையால் எங்கள் பகுதியில் உள்ள பலரது வீடுகள் சேதமடைந்துள்ளன, தங்குவதற்கு பாதுகாப்பான இடமின்றி அண்டை வீட்டாரின் வீடுகளில் சிலர் தங்கியுள்ளனர். சமையல் செய்ய முடியாத நிலையில் வீடுகள் உள்ளதால், கோயிலில் ஒரு வேளை வழங்கப்படும் மதிய உணவைத்தான் உண்டு வருகிறோம். 

இங்குள்ளவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது.தகுதியுள்ள அனைவருக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் எங்கள் பகுதியில் கழிவறை வசதி, தெருவிளக்கு ஏற்படுத்தித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 
Tags:    

Similar News