செய்திகள்
மின்சார ரெயில்

திங்கட்கிழமை முதல் மின்சார ரெயில்களில் பயண கட்டுப்பாடு நீங்குகிறது

Published On 2021-11-13 06:53 GMT   |   Update On 2021-11-13 09:27 GMT
சென்னை புறநகர் ரெயில்களில் திங்கட்கிழமை முதல் அனைத்து வகையான பயணிகளும் எல்லா நேரங்களிலும் ரெயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
சென்னை:

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அப்போது மின்சார ரெயில்களில் கூட்டம் அதிகமாக பயணிக்க கூடாது என்பதற்காக ரெயில்களில் பயணம் செய்வதில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது.

இதை தொடர்ந்து காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 7 மணி வரையும் மின்சார ரெயில்களில் பயணம் செய்வதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அந்த நேரங்களில் மின்சார ரெயில்களில் ஆண்கள் பயணம் தடை விதிக்கப்பட்டது.

இதே போல சீசன், ரிட்டன் டிக்கெட் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டன. மின்சார ரெயில்கள் முழு அளவில் இயக்கப்படுகிறது. ஆனால் முழு கட்டுப்பாடுகள் விலக்கப்படவில்லை.



இதற்கிடையே மின்சார ரெயிலில் பயணம் செய்வதற்கான கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம் செய்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை புறநகர் ரெயில்களில் திங்கட்கிழமை முதல் அனைத்து வகையான பயணிகளும் எல்லா நேரங்களிலும் ரெயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேலும் முன்பதிவு இல்லாத ஒருவழி பயணம், ரிட்டன் டிக்கெட், சீசன் டிக்கெட் ஆகியவை அனைத்து வகை பயணிகளுக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு இல்லாத டிக்கெட் செல்போன் செயலி மூலம் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை- அரக்கோணம், சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, கடற்கரை- செங்கல்பட்டு, கடற்கரை-வேளச்சேரி ஆகிய மார்க்கங்களில் இயக்கப்படும் அனைத்து மின்சார ரெயில்களிலும் பயணிகள் முழு அளவில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் நீங்கினாலும் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து பயணம் செய்யவும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

Similar News