செய்திகள்
கிழுமத்தூரில் பெரிய ஏரி நிரம்பி வழிந்ததை காணலாம்

தொடர் மழையால் பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 10 ஏரிகள் நிரம்பின- விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2021-11-12 15:54 IST   |   Update On 2021-11-12 15:54:00 IST
தொடர்ந்து பெய்து வரும் மழையால் பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 10 ஏரிகள் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் ஏற்கனவே விசுவக்குடி, கொட்டரை நீர்த்தேக்கங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 71 ஏரிகளில், 18 ஏரிகள் ஏற்கனவே நிரம்பிய நிலையில், தற்போது கீழப்பெரம்பலூர், வயலூர், கிழுமத்தூர், அகரம்சீகூர், பேரையூர், சாத்தனவாடி, நெய்குப்பை, கீரவாடி ஆகிய ஏரிகளும், லாடபுரம் பெரிய ஏரி, வி.களத்தூர் சிறிய ஏரி என 10 ஏரிகளும் நிரம்பி, மறுகாலில் உபரி நீர் வெளியேறி செல்வதால், அதன் அருகே உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

பல குளங்களும் நிரம்பியுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் மாவட்டத்தில் நெற்குணம், பென்னக்கோணம், காரியானூர் ஆகிய 3 ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. பெரம்பலூர் சிறிய ஏரி, துறைமங்கலம் பெரிய ஏரி, ஆயிக்குடி ஏரி ஆகிய 3 ஏரிகளில் 71 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. 6 ஏரிகளில் 51 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. 11 ஏரிகளில் 26 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. 22 ஏரிகளில் ஒரு சதவீதம் முதல் 25 சதவீதம் வரை தண்ணீர் நிரம்பியுள்ளது.

பச்சமலை பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள கோரையாறு அருவி, எட்டெருமை பாழி அருவி, லாடபுரம் மயிலூற்று அருவி, புதுநடுவலூர் அத்தி அருவி ஆகியவற்றிலும் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

Similar News