செய்திகள்
அமராவதி அணையில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் ஆய்வு செய்த காட்சி.

மழையால் நீர்வரத்து அதிகரிப்பு - அமராவதி,திருமூர்த்தி அணையில் அமைச்சர்கள் ஆய்வு

Published On 2021-11-11 07:13 GMT   |   Update On 2021-11-11 07:13 GMT
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததையொட்டி வனப்பகுதியில் உள்ள காந்தளூர், மூணார், மறையூர் உள்ளிட்ட அமராவதி அணையின் நீராதாரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
உடுமலை:

உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை ஆதாரமாக கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் கேரளா மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மூலம் மழை காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது. '

இந்த அணையை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதிஆறு மூலமாகவும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரப்படுகிறது. 

அத்துடன் அமராவதிஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததையொட்டி வனப்பகுதியில் உள்ள காந்தளூர், மூணார், மறையூர் உள்ளிட்ட அமராவதி அணையின் நீராதாரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு  நீர்வரத்தும் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அணை முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது. 

அணைக்கு ஏற்படுகின்ற நீர்வரத்து தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அணைப்பகுதியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர். 

அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்து, நீர்இருப்பு, அமராவதிஆறு மற்றும் பிரதான கால்வாயில் வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். அப்போது அணையில் மேற்கொண்டு வருகின்ற பாதுகாப்பு நடைமுறைகளை அமைச்சர்களிடம் அதிகாரிகள் எடுத்துக் கூறினார்கள்.

அதைத்தொடர்ந்து திருமூர்த்திஅணைக்கு சென்ற அமைச்சர்கள் அணைக்கு வந்து கொண்டுள்ள நீர் வரத்து, நீர்இருப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். மேலும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் உபரி நீரை வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். 

இதையடுத்து காண்டூர் கால்வாய்க்கு அருகில் சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடபதி எத்தலப்ப நாயக்கருக்கு அரங்கம் அமைக்கப்பட உள்ள இடத்தையும் ஆய்வு செய்தனர்.

அப்போது  தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன், திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன், துணைத்தலைவர் சண்முகவடிவேல், மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, ஆர்.டி.ஓ. கீதா, செயற்பொறியாளர் முருகேசன், உதவிப் பொறியாளர்கள் பாபுசபரீஸ்வரன், மாரிமுத்து மற்றும் பலர் உடனிருந்தனர். 
Tags:    

Similar News