செய்திகள்
சிறுவன் கொலை

நத்தம் அருகே 6 வயது சிறுவன் கழுத்தை அறுத்து படுகொலை - கல்லூரி மாணவரிடம் விசாரணை

Published On 2021-11-08 15:10 IST   |   Update On 2021-11-08 15:10:00 IST
நத்தம் அருகே 6 வயது சிறுவன் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக கல்லூரி மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செந்துறை:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறை அருகே உள்ள சின்னையம்பட்டியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 48). ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு 3 மகள்களும் ஹரிஹர தீபன் (6) என்ற மகனும் உள்ளனர்.

ஹரிஹரதீபன் தனியார் பள்ளியின் 2-ம் வகுப்பு படித்து வந்தான். வித்யா 100 நாள் வேலைக்கு செல்வது வழக்கம். நேற்று வழக்கம் போல் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் வீடு திரும்பிய வித்யா தனது மகள்கள் மட்டும் இருந்ததைப் பார்த்து மகனை தேடினார். ஆனால் கிடைக்கவில்லை.

அடிக்கடி வித்யாவின் அக்கா மகன் ராஜேஷ்குமார், உறவினர் பிரியதர்ஷிணி ஆகியோர் வீடுகளுக்கு ஹரிஹரதீபன் விளையாடச் செல்வது வழக்கம் எனவே அவர்களது வீட்டுக்கு சென்று வித்யா தேடிப்பார்த்தார். அங்கும் அவனை காணவில்லை.

எதேச்சையாக பிரியதர்ஷிணியின் வீட்டு மாடிக்கு சென்று பார்த்தபோது அங்கு ஹரிஹர தீபன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தான் இதை பார்த்ததும் அலறி துடித்த வித்யா அவனை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் காட்டுத் தீ போல பரவியது.

இதனையடுத்து நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனும் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில் ராமகிருஷ்ணனுக்கு 3 மகள்கள் இருந்தபோதும் ஆண் வாரிசுக்காக 4-வதாக ஹரிஹரதீபனை பெற்றெடுத்து ஆசையாக வளர்த்து வந்தனர். ராமகிருஷ்ணன் ஓட்டலில் வேலை பார்த்து வந்த போதிலும் வசதியாகவே இருந்து வந்துள்ளார். இவர்களது பூர்வீக சொத்தை பிரிப்பது தொடர்பாக உறவினர்கள் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

மேலும் ராமகிருஷ்ணன் வளர்ச்சியிலும் அவர்கள் பொறாமைபட்டு வந்துள்ளனர். இதனால் அவரது உறவினரான அஜய்குமார் (19) என்பவர்தான் கொலை செய்திருக்க கூடும் என தெரிய வந்துள்ளது. எனவே அவரிடம் சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். அஜய்குமார் தனியார் கல்லூரியில் பி.காம். 2ம் ஆண்டு படித்து வருகிறார். ஆரம்பத்தில் இந்த கொலை நரபலியாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்த நிலையில் தற்போது உறவினர்களுக்குள் ஏற்பட்ட முன் விரோதத்தில் தான் நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றனர்.

Tags:    

Similar News