செய்திகள்
ஜிகே வாசன்

ரெயில் பயணிகளுக்கு சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Published On 2021-11-06 06:59 GMT   |   Update On 2021-11-06 06:59 GMT
கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருளாதார ரீதியாக உதவிட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஜிகே வாசன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மத்திய அரசு கொரோனா காலத்தில் ரயில்வே துறையில் ரயில்களின் எண்ணிக்கை, பயணிகளுக்கான சலுகை ஆகியவற்றில் எடுத்த நடவடிக்கைகளில் தற்போது கொரோனா நோய் பரவல் பெருமளவு குறைந்திருப்பதால் மீண்டும் அனைத்து ரெயில்களை இயக்குவது, சலுகைகளை தொடர்வது ஆகியவற்றை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்

இந்திய ரெயில்வே துறையால் பல காலமாக மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், உயிர்காக்கும் சிகிச்சை மேற்கொள்வோர், போர் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பில் உயிரிழந்த ராணுவ மற்றும் காவல் துறையினரின் விதவை மனைவிமார்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர், ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்வோர், திரைத்துறையினர், மாநில மற்றும் தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 53 பிரிவினருக்கான பயண சலுகை வழங்கப்பட்டு வருகிறது.



ஆனால் இந்த கொரோனா காலத்தில் ஆண்டுக்கணக்கில் மேற்குறிப்பிட்ட அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக 60 வயது மூத்த குடிமக்கள் உட்பட பலரும் வருமானம் இன்றி அவதிப்படுகிறார்கள்.

கொரோனா நோய் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்து, கொரோனா இல்லாத நிலை ஏற்படுத்துவதற்காக முழு முயற்சியில் ஈடுபட வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமையாகும். அதே சமயம் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருளாதார ரீதியாக உதவிட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக தற்போது கொரோனா நோய் பரவல் பெருமளவு குறைந்து இருப்பதால் சிறப்பு ரெயில்களை ரத்து செய்து, வழக்கமான ரெயில்களை இயக்க அனுமதித்து, ரெயில் பயணிகளுக்கான அனைத்து சலுகைகளையும் உடனைடியாக மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்று ரெயில்வே துறைக்கும், மத்திய அரசுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கோரிக்கை வைக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News