செய்திகள்
அமைச்சர் துரைமுருகன்

கடந்த 10 ஆண்டுகளில் ஒரு அமைச்சராவது அணையை ஆய்வு செய்துள்ளார்களா? - துரைமுருகன் கேள்வி

Published On 2021-11-05 23:15 GMT   |   Update On 2021-11-05 23:15 GMT
முல்லைப் பெரியாறு அணை குறித்து பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் தார்மீகம் இல்லை என்றார் அமைச்சர் துரைமுருகன்.
தேனி:

கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் கடந்த  29-ம் தேதி முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறக்கப்படும் என்று அறிவித்தார். சொன்னபடியே, மொத்தமுள்ள 13 மதகுகளில், 8 மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையை தமிழக அரசின் அனுமதியில்லாமல் கேரள அமைச்சர்களும் அதிகாரிகளும் திறந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கேரள அரசின் இந்தச் செயலுக்கு பல்வேறு விவசாயச் சங்கங்களும், அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

இதற்கிடையே, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி, சக்ரபாணி உள்ளிட்டோர் உடன் சென்றனர். அணையைப் பார்வையிட்டபின் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



தனது சொந்த ஊருக்கு அருகில் இருக்கும் முல்லைப் பெரியாறு அணையை ஓ.பி.எஸ் ஒருநாள் கூட பார்வையிடவில்லை. இப்போது போராட்டம் நடத்துகிறார்களா?

கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தது இல்லை.

முல்லைப் பெரியாறு அணை குறித்து பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் தார்மீகம் இல்லை. 80 வயதிலும் நான் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளேன்.

30 ஆண்டு சராசரி கணக்கீட்டு படி நவம்பர் 30-ம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரம் வரை நீரை தேக்கலாம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News