செய்திகள்
அமராவதி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டும் வரை காத்திருக்காமல் நீர்வரத்தை பொறுத்து அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவது வழக்கம்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையின் நீர்மட்டம் தற்போது 86.22 அடியாக உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் முழு கொள்ளளவான 90அடியை நெருங்கும் நிலை உள்ளது. இதனால் உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளதால் அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் கூறுகையில், அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டும் வரை காத்திருக்காமல் நீர்வரத்தை பொறுத்து அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவது வழக்கம். தற்போது அணைக்கு 686 கனஅடி நீர் வரத்து உள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பால் எந்நேரமும் அதிகமான அளவில் உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளது. இதனால் முன்கூட்டியே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றனர்.