செய்திகள்
மழை

கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை

Published On 2021-11-02 12:05 IST   |   Update On 2021-11-02 12:05:00 IST
விவசாயிகள் சம்பா சாகுபடியில் ஈடுபட்டு வரும் நிலையில் மழையால் சாகுபடிக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழையில் நனைந்து அழுகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
கடலூர்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சிதம்பரம், பண்ருட்டி விருத்தாசலம் திட்டக்குடி காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

நேற்றும் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. கடலூர் நகராட்சி சார்பில் கால்வாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வந்ததால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை. மேலும் இந்த பலத்த மழையால் சாலைகள் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்பட்டு தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தொடர்ந்து பண்டிகை காலத்தில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

இந்த மழையால் சாலையோர வியாபாரிகள் மற்றும் பட்டாசு கடைகள் என அனைத்து இடங்களிலும் வியாபாரம் மந்தமாக காணப்பட்டது. மேலும் விவசாயிகள் சம்பா சாகுபடியில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த மழையால் சாகுபடிக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழையில் நனைந்து அழுகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து கடலூர் மாவட்டம் முழுவதும் 228 ஏரிகள் உள்ள நிலையில் 22 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது மீதம் உள்ள ஏரிகள் அனைத்தும் விரைந்து நிரம்பி வருகின்றனதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.

Tags:    

Similar News