செய்திகள்
வடகாட்டில் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள சிமெண்டு விறகு அடுப்புகளை படத்தில் காணலாம்.

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு: விறகு அடுப்புக்கு மாறும் இல்லத்தரசிகள்

Published On 2021-10-30 19:36 IST   |   Update On 2021-10-30 19:36:00 IST
சமையல் எரிவாயு விலை உயர்வால் விறகு அடுப்புக்கு இல்லத்தரசிகள் மாறி வருகிறார்கள்.
வடகாடு:

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் விழி பிதுங்கி நிற்கும் நிலையில் சமையல் எரிவாயுவும் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது ஒரு சிலிண்டர் ரூ.1000-த்தை நெருங்கி விட்டது. இதனால், இல்லத்தரசிகளும் கண்ணை கசக்கி வருகிறார்கள்.

இந்த விலையேற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுவது கிராமப்புற பெண்கள் தான். இவர்கள் அன்றாடம் கூலி வேலைகளுக்கு சென்று தான் பிழைப்பு நடத்தி வருகின்றனர். தற்போது எரிவாயு சிலிண்டர் ரூ.1,000-த்தை நெருங்கி விட்டதால் அவ்வளவு விலை கொடுத்து தாங்களால் வாங்க இயலாது என்று வேதனையுடன் தெரிவித்த அவர்கள் இனி பழையபடி விறகு அடுப்புக்கு மாறி விட வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்து விட்டனர்.

இதுகுறித்து வடகாடு பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் கூறுகையில், ஆரம்ப காலத்தில் விறகு அடுப்பில் தான் சமையல் செய்து வந்தோம். அதன்பிறகு மத்திய, மாநில அரசுகள் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று கூறி மானிய விலையில் எரிவாயு சிலிண்டர் வழங்கினர். அதன்படி விறகு அடுப்பை தவிர்த்து சிலிண்டரில் சமைக்க தொடங்கினோம். ஆனால் சமையல் எரிவாயு படிப்படியாக உயர்ந்து ரூ.1,000-த்தை நெருங்கி விட்டது. நாங்கள் கூலி வேலைக்கு செல்பவர்கள். இவ்வளவு விலை கொடுத்து எங்களால் எரிவாயு சிலிண்டர் வாங்க இயலாது. ஆகவே, பழையபடி விறகு அடுப்புக்கு மாறுவதை தவிர வேறு வழியில்லை என்றனர். இதன் காரணமாக நவீன முறையில் உருவாக்கப்பட்ட சிமெண்டு விறகு அடுப்புகளை இல்லத்தரசிகள் வாங்கி செல்கிறார்கள்.

Similar News