செய்திகள்
அம்மி, ஆட்டுக்கல் போன்றவற்றை வடிவமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளதை படத்தில் காணலாம்.

சாலையோரத்தில் விற்கப்படும் அம்மி, ஆட்டுக்கல்லை வாங்க பொதுமக்கள் ஆர்வம்

Published On 2021-10-28 19:47 IST   |   Update On 2021-10-28 19:47:00 IST
கறம்பக்குடி பகுதியில் சாலையோரங்களில் தொழிலாளர்களால் நேரடியாக வடிவமைத்து விற்கப்படும் அம்மி, ஆட்டுக்கல்லை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கறம்பக்குடி:

நாகரிகத்தின் வளர்ச்சி மனிதனிடம் பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. விஞ்ஞானத்தின் வியத்தகு முன்னேற்றம் உலகை உள்ளங்கையில் சுருக்கிவிட்டது. நடை, உடை, பாவனைகள், வாழ்க்கைமுறை போன்றவற்றில் ஏராளமான மாற்றங்கள் உருவாகி உள்ளன. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் அம்மி, ஆட்டுக்கல், உரல், திருகை போன்றவை இருக்கும். நெல் குத்தி அரிசியாக்குவது, உணவு பண்டங்களுக்கான மாவுகளை தயார் செய்வது போன்ற பணிகளுக்கு இவை பயன்படுத்தபட்டன. ஆனால் காலமாற்றத்தினாலும், மின்சாதன பொருட்களின் பயன்பாடுகள் அதிகரித்து விட்டதாலும் அம்மி, ஆட்டுக்கல்லுக்கான தேவை குறைய தொடங்கியது.

நகர பகுதிகளில் வசிப்பவர்கள், அடுக்குமாடி கட்டிடங்களில் குடியிருப்போர், போன்றவர்கள் இவற்றிற்கான தேவையை உணராதவர்களாகவே இருந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் சென்னையில் ஏற்பட்ட பெரும் வெள்ளம், கஜா, வர்தா புயல்களின் தாக்கம் போன்றவற்றால் தொடர்ந்து 5 முதல் 10 நாட்கள் மின்சாரம் இல்லாத போதுதான் உணவு தயார் செய்வதற்கு அம்மி, ஆட்டுகல்லை தேடும் நிலை ஏற்பட்டது. இதனால் இவற்றை பெரு நகரங்களில் வசிப்பவர்களும் வாங்க தொடங்கி உள்ளனர்.

கறம்பக்குடி பகுதியில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் வந்து தங்கி சாலையோரங்களில் அம்மி, ஆட்டுக்கல், திருகை போன்றவற்றை வடிவமைத்து விற்பனை செய்கின்றனர். குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்றவாறு விரும்பும் வகையில் வடிவமைத்து கொடுப்பதால் இவற்றை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அம்மி, ஆட்டுக்கல், உரல் போன்றவை ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்படுகிறது.

திருகை ரூ.600 முதல் ரூ.750-க்கு விற்பனை ஆகிறது. இதுகுறித்து அம்மி மற்றும் திருகை வாங்க வந்த இளம் தம்பதிகள் கூறுகையில், பணிநிமித்தம் தனி குடித்தனம் நடத்த வேண்டிய சூழல் உள்ளது. இயற்கை உணவு மூலிகை வைத்தியம் போன்றவை குறித்து இன்றைய இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. இவற்றை தயார் செய்ய அம்மி, ஆட்டுக்கல் போன்ற கைவினைபொருட்கள் அவசியம். எந்த சூழலிலும் இவற்றின் மவுசு குறைந்து விடாது என தெரிவித்தனர்.

Similar News