செய்திகள்
கைது

அடைக்கம்பட்டியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் சிறையில் அடைப்பு - 5 பவுன் நகை மீட்பு

Published On 2021-10-25 16:04 IST   |   Update On 2021-10-25 16:04:00 IST
அடைக்கம்பட்டி கிராமத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர். 5 பவுன் நகையை மீட்டனர்.
பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, அடைக்கம்பட்டி கிராமத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரே நாளில் 3 வீடுகளில் நகை- பணம் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். அவர்களை பாடாலூர் போலீசார் பிடிப்பதற்குள், அடைக்கம்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்றனர். தொடர் திருட்டு சம்பவம் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்பேரில், பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் மேற்பார்வையில், பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் டி.களத்தூர் பகுதியில் ரோந்து சென்றபோது, சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் அந்த நபரை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று கிடுக்குப்பிடி விசாரணையை தொடர்ந்தனர்.

இதில் அவர் டி.களத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொன்னார் (வயது 36) என்பதும், அவரும், அடைக்கம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த மாணிக்கராஜாவும் (46) சேர்ந்து அடைக்கம்பட்டி கிராமத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பாடாலூர் போலீசர் வழக்குப்பதிவு செய்து பொன்னார், மாணிக்கராஜா ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் பெரம்பலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் தங்கள் பகுதியில் சந்தேகப்படும்படியாக நபர்கள் சுற்றித்திரிந்தால் உடனடியாக அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Similar News