செய்திகள்
நகை அபேஸ்

காரைக்குடி அருகே போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் 12 பவுன் நகை அபேஸ்

Published On 2021-10-24 13:48 GMT   |   Update On 2021-10-24 13:48 GMT
காரைக்குடி அருகே போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் 12 பவுன் நகை அபேஸ் செய்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காரைக்குடி:

காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்தவர் நாகவள்ளி (வயது 66). இவர் காரைக்குடி டி.டி. நகரில் உள்ள பாத்திரக்கடையில் தனக்கு தேவையான பாத்திரங்களை வாங்கிக்கொண்டு கோட்டையூர் செல்வதற்காக புதிய பஸ் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பஸ் நிலையம் அருகே செல்லும்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் இருவர் தங்களை போலீஸ் என்று கூறிக்கொண்டு தீபாவளி நேரத்தில் திருடர்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இப்படி தனியாக நகைகளை அணிந்து கொண்டு செல்கிறீர்களே, நகைகளை கழற்றி பையில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினர்.

அதனை நம்பிய நாகவள்ளி தான் அணிந்திருந்த 12 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் வளையல்களை கழற்றி தனது பையில் வைத்துள்ளார். சரியாக வைத்திருக்கிறீர்களா என்று பையை வாங்கி பார்ப்பது போல் அந்த வாலிபர்கள் நாகவள்ளியின் கவனத்தை திசை திருப்பி நகைகளை எடுத்துக் கொண்டு பையை நாகவள்ளியிடம் கொடுத்து பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டனர். அதன் பின்னர் மூதாட்டி அந்த பையை திறந்து பார்த்தபோது அதில் வைத்த 12 பவுன் நகையை காணவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நாகவள்ளி இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை ஏமாற்றி நகையை அபேஸ் செய்த வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News