செய்திகள்
இடி தாக்கியதில் தீ பிடித்து எரிந்த பனை மரம்.

ஈரோடு மாவட்டத்தில் இடி-மின்னலுடன் கனமழை: இடி தாக்கி பனைமரம் தீ பிடித்து எரிந்தது

Published On 2021-10-22 03:56 GMT   |   Update On 2021-10-22 03:56 GMT
அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 48.8 மி.மீட்டர் மழை பெய்தது. இதன் காரணமாக வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதேபோல் நேற்று மாலையும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டியது.

கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாலை 6 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு 8 மணி வரை 2 மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. இடி-மின்னலுடன் மழை கொட்டியதால் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூர் சிட்டாசாலை என்னும் இடத்தில் ரோட்டோரம் இருந்த ஒரு பனை மரத்தை இடி தாக்கி தீ பிடித்து எரிந்தது.

இதேபோல் பல்வேறு இடங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தது. பலத்த மழை காரணமாக தாழ்வான இடங்களில் மழை வெள்ளம் குளம்போல் தேங்கி நின்றது.

தாளவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மதியம் 2 மணி முதல் மழை பெய்ய ஆரம்பித்தது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது. தாளவாடி அடுத்த ஜீர்கள்ளி, கல்மண்டிபுரம், தொட்ட முதிகரை, கணேசபுரம், சோளகர்தொட்டி , இட்டரை, காளிதிம்பம், பெஜலட்டி மற்றும் வனப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

இதனால் அங்கு இருந்த ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மக்காசோள பயிர்கள் மண்ணில் சாய்ந்தது. உருளைக்கிழங்கு மற்றும் வாழை தோட்டத்தில் மழை நீர் குளம்போல் தேங்கியது.

இதனால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த உருளைக் கிழங்கு அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. கல்மண்டிபுரத்தில் இருந்து சோளகர்தொட்டி செல்லும் சாலையில் உள்ள தரை பாலத்தை மழை நீர் மூழ்கடித்து சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வனப்பகுதியில் பெய்த பலத்த மழையால் தாளவாடியில் இருந்து ஆசனூர் செல்லும் சாலை கும்பாரகுண்டி அருகே உள்ள தரைபாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது. இதனால் இரு கரையிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமார் 1 மணி நேரத்திக்கு பிறகு மழை நீர் வடிந்த பிறகு வாகனங்கள் சென்றன. தொடர் மழை காரணமாக வனப்பகுதி முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 48.8 மி.மீட்டர் மழை பெய்தது. இதன் காரணமாக வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இதேபோல் கொடுமுடி, பவானி, சென்னிமலை, மொடக்குறிச்சி, அம்மாபேட்டை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. தொடர் மழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

ஈரோடு-23, கொடுமுடி-18.2, பெருந்துறை-14.2, பவானி-27.6, கோபி-35.8, சத்தி-3, பவானிசாகர்-7.2, தாளவாடி-12.5, நம்பியூர்-4, சென்னிமலை-22, மொடக்குறிச்சி-24, எலந்தகுட்டைமேடு-44, கவுந்தப்பாடி-18, அம்மாபேட்டை-27.6, கொடிவேரி-7.2, குண்டேரிபள்ளம்-14.2, வரட்டுப்பள்ளம்-42.8.

Tags:    

Similar News